வஞ்சிரம் மீனுக்கு இலங்கைத் தமிழ் என்ன?

வஞ்சிரம் மீன், குழம்பு வைக்க பொரிக்க சோக்கான மீன். தமிழ்நாட்டில் இதை வஞ்சிரம் என்பார்கள், இலங்கையில் Seer fish என்பார்கள். கொழும்பில் கிடைக்கும்.
யாழ்ப்பாணத்தில் நான் கண்டதில்லை. இதனால் இலங்கைத் தமிழ்ப் பெயர் எனக்குத் தெரியாது.

Mackerel வகை மீன்களில் ஒரு இனமான ஸ்பனிஸ் மக்கரல் (Spanish Mackerel) மீனே, வஞ்சிரம்.

குறிப்பு:
Mackerel வகை மீன்களில் பல இனங்கள் உண்டு. பெரும்பாலும் சந்தைக்கு வருவன, Bonito, slimy - Mackerel, Spotted - Mackerel, School - Mackerel, Jack - Mackerel, Spanish - Mackerel, Wahoo ஆகியன. இவற்றுள் ஸ்பனிஸ் மக்கரலே வஞ்சிரம். அதுவும் வெப்ப மண்டலக் கடலில் வாழும் ஸ்பனிஸ் மக்கரல் சுவை கொண்டது.

கொசுறுச்செய்தி:
மக்கரல் மீன்களை துண்டு துண்டாக வெட்டி சந்தையில் விற்பார்கள். இதில் முன்துண்டா, வால் துண்டா, நடுத்துண்டா நல்லது.?

வால்த் துண்டு குழம்பில் அவிந்து, எண்ணெய்யில் பொரிந்து 'வலியன்' பத்திவிடும். காரணம் மீன் நீந்தும் போது தொடர்ச்சியாக வாலை ஆட்டும். இதனால் வால்த் தசை இறுக்கமடைவதுடன் வாலில் அதிகளவு கிமோகுளோபின் கலந்த கறுப்புத் திண்மம் படிந்திருக்கும். இது வாலுக்குத் தேவையான மேலதிக ஒக்சிசனைப் பெற்றுக் கொடுப்பதில் பங்கேற்கும். ஆனால் நடுப்பகுதித் தசைக்கு அதிக வேலை இல்லை. இதனால், இது மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் பரவைக் கடல் (ஆழமற்ற கடல்) மீன்களையே விரும்பி வாங்குவார்கள்.
ஆழமற்ற கடலில் அலைகள் குறைவு. இக்கடலில் மீன்கள் நீந்துவதற்கு தகைளின் இயக்கம் அதிகம் தேவையில்லை. இதனால் பரவைக் கடல் மீன்கள் மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.