நித்யானந்தா உருவாக்கிய புது நாடு!


ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு உள்ளான நித்யானந்தா அண்மையில் தனது குஜராத் ஆசிரமத்தில் குழந்தைகளை கடத்தி அடைத்து வைத்திருப்பதாக புதிய சர்ச்சையில் அடிபட்டார். பல பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் தேடிய நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார்.


ஆனால் இப்போது நித்யானந்தாவைப் பற்றி வந்திருக்கும் செய்தி இன்னும் கொஞ்சம் அதிர வைக்கிறது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தா இப்போது தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கான கொடி, பாஸ்போர்ட் எல்லாம் தயார் செய்திருக்கிறார். அந்த தேசத்துக்கு கைலாசா என்று பெயரிட்டிருக்கிறார் நித்யானந்தா.



தென்னமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கியிருக்கும் நித்யானந்தா, அந்தத் தீவுக்கு கைலாசா என்று பெயரிட்டுள்ளார். கைலாசம் என்றால் சிவபெருமானின் இருப்பிடம் என்று பொருள். டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, இறையாண்மை மிக்க இந்து நாடாக நித்யானந்தாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரதமர், அமைச்சரவை இருப்பதாகவும் கைலாச நாட்டின் வலைத் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.



நாட்டைப் பற்றிய அறிமுகத்தில், “ கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு, உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமையை இழந்தவர்கள் கைலாசா தேசத்துக்கு வரலாம்.

கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டிருந்தாலும், இந்து ஆதி சைவ சிறுபான்மை சமூகத்தின் உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டாலும் இது உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் சொர்க்கமாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நாட்டிற்காக நன்கொடைகளை வழங்கவும், அதன் மூலம், ‘மிகப் பெரிய இந்து தேசமான’ கைலாசாவின் குடியுரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கும் உலக இந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நித்யானந்தா,

‘கைலாசா’ நாட்டுக்கான பாஸ்போர்ட்டின் இரண்டு பதிப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஒன்று தங்க நிறம், மற்றொன்று சிவப்பு. கொடி ஒரு மெரூன் பின்னணியைக் கொண்டுள்ளது மற்றும் பர்கி வடிவத்தில் இரண்டு சின்னங்களுடன் உள்ளது - ஒன்று சிம்மாசனத்தில் நித்யானந்தா மற்றும் மற்றொரு நந்தி சின்னத்தையும் கொண்டுள்ளது.

கைலாசா நாட்டின் அரசாங்கத்துக்கு பத்து துறைகள் இருந்தாலும் நித்யானந்த பரமசிவம், அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் டிஜிட்டல் ஈடுபாடு மற்றும் சமூக ஊடக அலுவலகத்தை நிர்வகிக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.