இரணைமடு குளத்திற்குள் ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள்!!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்குள் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் விடப்பட்டன.


குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இரணைமடு நன்நீர் மீன்பிடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, இரணைமடு குளத்தில் வேறு பிரதேசங்களிலிருந்த கொண்டுவந்து விடப்படும் முதலைகளால் பெரும் சவால்கள் காணப்படுவது தொடர்பில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆபத்தான முதலைகளை இங்கு கொண்டுவந்து விடுவதனால் பெரும் அச்சம் காணப்படுவதாகவும் அமைச்சரிடம் மீனவர்கள் எடுத்துரைத்ததுடன், குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரணைமடு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மீனவர்களால் முன்வைக்கப்பட்ட முதலை அச்சுறுத்தல் தொடர்பாக தான் அமைச்சரவையில் பேசுவேன் என்றும் குளத்தில் விடப்படும் முதலைகளிற்காக ஓர் காப்பகம் அல்லது பாதுகாப்பான வேறு முறைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், அதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் குழப்ப நிலை தொடர்பில் அவரிடம் செய்தியாளர்கள் வினவிய போது, ‘தற்போது முதலைகள் தொடர்பில் நாம் பேசினோம். இது யானை தொடர்பான விடயம். இதனை நாம் பெரிய விடயமாக பார்க்க வேண்டியதில்லை.

அரசியலில் கட்சிகளுக்கு இடையில் வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல இங்கும் இப்பிரச்சனை உருவாகியுள்ளது. அதைப்பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை. எமது ஆட்சி ஆக குறைந்தது 5 ஆண்டுகளுக்கேனும் இருக்கும் என்று நம்புகின்றேன். இந்த காலகட்டத்தில் கடந்த காலங்களில் நாங்கள் செய்ததைவிட அதிகமாக மக்களின் அபிவிருத்தி, வாழ்வாதாரம், எதிர்கொள்ளும் அரசியல் உரிமைப்பிரச்சினை சகலவற்றிற்கும் தீர்வு காணுவோம்’ எனத் தெரிவித்தார்.

‘இது மக்களிடமும் தங்கியுள்ளது. மக்கள் எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் மக்களிற்கு பொருத்தமில்லாதவர்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களை மக்கள் தவறுதலாக வழி காட்டப்பட்டு தெரிவு செய்துவிட்டார்கள். தற்போது மக்கள் தமது தவறுகளை உணர்ந்து வருகின்றனர். எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்தால் மக்கள் வாழ்வு வளம் பெறும்’ எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.