பூமியைப் பூவாய் இரசிக்கும் இதமும்!!

காலம் தன் சிறகை விரித்து ஆழப்பறந்துகொண்டிருக்கிறது
இப்படித்தான் 2019வருகையில்
 வானத்தைக் குடையென வளைக்கும் கனவும்
 பூமியைப் பூவாய் இரசிக்கும் இதமும்
மனிதர்களை கற்றுக்கொள்ளும் படிப்பும்
வந்து போயின
ஆனால் எதுவும் முற்றுப் பெற்றதாயில்லை
இனியும் முற்றுப் பெறாது
அப்படி முற்றுப் பெற்றால் 2020ற்கு இங்கு என்ன வேலை

2020ஐப் பார்த்து இறைஞ்சலாம்
2019ஐப் போல் பம்பலடிக்காதே
பொய் சொல்லாதே
மிட்டாசு வாங்கும் குழந்தைக்கு கதை சொல்வது போலவும்
உருண்டையை வாயுள் நுழைக்க அம்மா சொல்லும் அம்புலி மாமாக் கதை போலவும்
கதைவிடாதே என

ஆசைகளை அடுக்கி வைத்து
 சுமக்கத் தெரியா கழுதை போலவும்
எதிர்பாராத சில சுகங்களைத் தந்து
சுமைகளைக் குறைத்த பொழுது போலவும்
நம்பிக்கையின் பாடல்களில்
நஞ்சினை மீட்டிய வீணையாகவும்
துன்பத்தின் கண்களில்
 பூக்களைத் தூவிய வசந்தமாகவும்
2019இருந்ததை எளிதில் மறக்க முடியாது

ஒரு கதைக்கு
2020ஆனது 2019இன் குழந்தையாகவோ
காதலியாகவோ
 தோழ தோழியராகவோ இருக்கலாம்
அலைந்தலையும் வீதிகளில் பேசாமல் காதலித்து மகவு காணும் மரங்கள் பறவைகள் விலங்குகள் இன்ன பிற சீவன்களுக்கான சுகம் காலத்துக்கும் இருக்குமல்லவா

காலமும் குடும்பம் சமைக்கும்
காலமும் குழந்தை சனிக்கும் என்பதை
2019நிறையவே சொல்லியிருந்தது
பூக்கள் பலதானாலும்
எல்லாப் பூக்களுக்கும் வாசம் உண்டென
காலம் கற்பித்தன

காலக் கற்றலில் மனிதனின் நிறங்களை அறிதல் அடிப்படைப் படிப்பு ஆனது
வாழ்வின் பல மனிதர்களைக் காட்டிய 2019ஆனது
2020யும் அனுப்பி அணைத்து வைத்திருக்கிறது நம்மை
நாம் அடைய வேண்டிய காலம் விரிந்தது என

ஆதலால் காலப்புத்தகத்தைப் படிப்போம்
அதில் மனிதன் என்ற பாடம்
கணிதம்போல் விளங்கிக் கொள்ள கொஞ்சம் கசக்கும் என்ற உண்மையுடன்

த.செல்வா
01.01.2020

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.