லிபிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச தலைவர்கள் இணக்கம்!

எண்ணெய் வளம் நிறைந்த வட ஆபிரிக்க நாடான லிபியாவில், நீண்டகாலமாக நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ‘லிபியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாட்டில், உலகத் தலைவர்கள் இதற்கான தீர்மானத்தை எடுத்தனர்.

இதற்கமைய ஐந்து மணி நேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் லிபியாவில் போர்நிறுத்தத்தை நோக்கி செயற்பட அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன.

லிபியாவில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படையினருக்கும், முன்னாள் இராணுவ தளபதி காலிஃபா ஹஃப்தாரின் படையினருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.

இதனால், ஐ.நா.வின் அழைப்பை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், துருக்கி ஜனாதிபதி எர்டோகன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஜேர்மனி சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.

ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்ற இந்த மாநாட்டில், காலிஃபா ஹஃப்தார் படை, சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசு ஆகிய இரு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும், சர்வதேச அமைதி மாநாட்டில் பங்கேற்பது கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த அல்-கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சிப் படையினர் கடந்த 2011ஆம் ஆண்டு கவிழ்த்தனர்.

எனினும், அதற்குப் பிறகு அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசுப் படையினருக்கும், முன்னாள் இராணுவ தளபதி காலிஃபா ஹஃப்தார் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், துருக்கியைப் பூர்விகமாகக் கொண்ட ஃபாயஸ் அல்-சராஜ் அரசுக்கு ஆதரவாக, லிபியாவுக்கு தங்கள் நாட்டுப் படையினரை அனுப்ப துருக்கி முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹஃப்தார் படையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளனர். இது ஹஃப்தார் மற்றும் அல்-சராஜ் படையினருக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கிழக்குத் தளபதி கலீஃபா ஹப்தார், ரஷ்யாவின் ஆதரவைப் பெற்றவர், ஆனால் கடந்த வாரம் மொஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.