விடுதலைப்புலி உறுப்பினர்களையும் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்!

தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவ உறுப்பினர்களை மட்டும் விடுதலை செய்தால், நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு தொடுக்கப்படும் என்பதனால், சிறையில் உள்ள முன்னாள் விடுதலைபுலி உறுப்பினர்கள் 70க்கும் அதிகமானவர்களுடன், இராணுவ உறுப்பினர்களையும் ஒன்றாக இணைத்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னணி ஆர்வலரும் முன்னாள் இராணுவ மேஜரும் பிரதமர் மகிந்தவின் முக்கிய ஆதரவாளருமான சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான், கே.ஜீக்கு சுகந்திரமாக இருக்க முடியும் என்றால் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 70 பேருக்கும் சுகந்திரம் வழங்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"றோயல் பார்க் வழக்கு, அதில் அந்தோணி எனப்படும் மில்லியனர் தொழிலதிபரின் மகனுக்கு ஜனாதிபதி சிறிசேன மன்னிப்பு வழங்கிய நிலையில் , அந்த மன்னிப்புக்குப் பிறகு, இரு தரப்பினரும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அதை சவால் செய்தனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பலரில், எப்படி அந்தோணியை மட்டும் தேர்ந்தெடுத்து அவருக்கு மட்டும் விடுதலை வழங்கப்பட்டது. அது தவறு. ஏன் மற்றவர்களுக்கு இல்லையா? அதை நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. இப்போது மைத்ரிபால சிறிசேன அந்த வழக்கின் பிரதிவாதி.
தற்போது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதே நிலைமை தான். ஏன் அது? இந்த நாட்டின் நீதிமன்றத்தால் யுத்தத்தில் பங்குபற்றிய இரு தரப்பிலும் ஏராளமானவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
புலிகளின் மரண தண்டனை விதிக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சுனில் ரத்நாயக்க மட்டுமல்ல, மேஜர் டிக்சன் ராஜமந்திரி, கொப்ரல் பிரியந்த ராஜகருணா, சமந்த புஷ்பகுமார. 4 இராணுவ வீரர்கள் உள்ளனர்.
இப்போது இந்த இராணுவ வீரர்கள் நால்வருக்கு மன்னிப்பு வழங்கியவுடன் வழக்குக்கு மேல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்.
ஏன் அப்போது தமிழ் விடுதலைபுலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டாமா? சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமா வழங்குவது? எனவே செய்யவேண்டியது ஒன்று தான். இரு தரப்புக்கும் மன்னிப்புக்கு வழங்குவது மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த கருணா அம்மான் , குமரன் பத்மநாதன் வெளியே இருக்கிறார் என்றால் , உள்ளே இருக்கும் 70 உறுப்பினர்களையும் விடுதலை செய்தால் இந்த நாடு கவிழ்க்கப்படுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனால் நாங்கள் ஜனாதிபதி அவர்களிடம் வேண்டுகோள் விடுகின்றோம் என்றும், பெப்ரவரி 04ம் திகதி விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் எங்கள் இராணுவ உறுப்பினர்கள் எல்லோரையும் ஒன்றாக விடுதலை செய்யுங்கள் எனவும் சட்டத்தரணி அஜித் பிரசன்ன இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.