கிளி / தருமபுரம் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு நடந்தேறும் அவலம்!!

கிளிநொச்சியின் கண்டாவளைப் பிரதேசத்தின் பிரதான சிகிச்சை மையமான தருமபுரம் வைத்தியசாலையானது இரவு வேளைகளில் உத்தியோகப்பற்றற்ற வகையில் மூடப்படுவதாக பிரதேசப் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும் தருமபுரம் வைத்தியசாலையே பிரதான வைத்தியசாலையாக உள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்காக இரவு வேளைகளில் செல்லும் நோயாளர்களை மறுநாள் காலை ஆறு மணிக்கு வருமாறும், அவசரம் எனில் நேரடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குச் செல்லுமாறும் வைத்தியசாலை ஊழியர்களால் பணிக்கப்படுகின்றனர்.

அதையும் மீறி தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்க கோரும் நோயாளிகள் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டாலும் மறுநாள் காலையிலேயே அவர்களை வைத்தியர்கள் பார்வையிடுவதாகவும் பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மயில்வாகனபுரத்திலிருந்து இரத்த வாந்தியுடன் இரவு பத்து மணியளவில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட பதினெட்டு வயது இளைஞன் ஒருவர் மறுநாள் காலை ஆறுமணியளவிலேயே வைத்தியர் ஒருவரால் பார்வையிடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் இளைஞனின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் வெளிநோயாளர் பிரிவிற்கு வருகைதரும் நோயாளர்களை வைத்தியர்கள் சரியாக பார்வையிடுவதில்லை எனவும், நோயாளி நோயை கூறுவதற்கு முன்பாகவே வைத்தியர் மருந்துச்சிட்டையை வழங்குவதாகவும் நோயாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக இரண்டு வைத்தியர்கள் கடமையாற்றும் குறித்த வைத்தியசாலையில் அவர்களுக்கு மேலதிகமாக ஓய்வு பெற்று ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ‘லண்டன் ஐயா’ என்ற வைத்தியரிடம் சிகிச்சை பெறவே அனேக நோயாளர்கள் விரும்புவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத நோயாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்விற்கு முன்னரும் பின்னரும் ஒரு வைத்தியருடன் இயங்கிய காலப்பகுதிகளில் கூட இருபத்து நான்கு மணிநேரமும் வைத்தியரால் நோயாளிகள் பார்வையிடப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந் நிலையில் , தற்போது இரண்டு வைத்தியர்கள் பணியாற்றும் நிலையில் கடந்த ஒரு வருடகாலமாக வைத்தியசாலையில் செய்ல்பாடு தொடர்பில் பொதுமக்கள் கடும் விசனங்களை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை தர்மபுரம் வைத்தியசாலை இடம்பெறும் இவ்வாறான செயல்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் கூறுகையில்,

குறித்த விடயம் தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாவும், இதனையடுத்து தான் உடனடியாக தர்மபுரம் வைத்தியாலைக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் மக்களின் குற்றசாட்டுகள் தொடர்பில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பொது மக்கள் இனி வழமைபோன்று வைத்தியசாலை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.