உணவுத் துறையில் 1,480 கோடி ஊழல்!


ரேஷன் பொருட்கள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.


தமிழக உணவுத் துறையின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் (ஜனவரி 24) செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், கடந்த சில ஆண்டுகளில் உணவுத் துறைக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கழகத்தில் 1,480 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

“மிக முக்கியமாக சர்க்கரை, பாமாயில், பருப்பு ஆகிய மூன்று பொருட்கள் கொள்முதல் செய்வதிலும் ஊழல் நடந்துள்ளது. இதற்காக ஆதாரங்களைத் திரட்டி சிபிஐக்கு அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்த அவர்,

“இந்த ஊழலுக்கு துறையின் அமைச்சர் காமராஜ், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் சுதா தேவி, கிறிஸ்டி பிரைடுகிராம் நிறுவனம் ஆகியோர்தான் பொறுப்பு. இதில் மத்திய அரசின் பொதுத் துறை உணவு நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இந்த ஊழல்கள் வித்தியாசமான முறையில் நடந்துள்ளன என்று குறிப்பிட்ட ஜெயராமன், “உதாரணமாக சர்க்கரையை கொள்முதல் செய்வதென்றால் சர்க்கரை ஆலைகளிடம் பேசி கொள்முதல் செய்வார்கள். இதுபோன்ற டெண்டர்களில் 10 முதல் 15 வரையிலான ஒப்பந்ததாரர்கள் பங்கெடுப்பர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த முறை ஓரளவு சரியாகத்தான் இருந்துவந்தது. கிறிஸ்டி நிறுவனம் உள்ளே வந்த பிறகு, ஏற்கனவே பங்கெடுத்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கெடுக்க முடியாதபடி, அவர்களுக்கு ஏற்றது போல டெண்டர் விதிகள் மாற்றப்பட்டன” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை முன்பு டெண்டர் எடுத்திருந்த நிறுவனங்கள் சந்தை மதிப்புக்கே வழங்கிவந்தன. ஆனால், கிறிஸ்டி நிறுவனம் வந்த பிறகு சந்தை மதிப்பை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து வழங்கியது. இதில் மட்டும் சுமார் 1,480 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதுபோன்ற ஊழல்களால் தான் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் சரிவர கிடைக்கவில்லை” என்றும் குற்றம்சாட்டினார். இந்த ஊழல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.