இந்தியாவின் பங்களிப்புடன் கிளிநொச்சியில் கலை விழா!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் மற்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்வுகளின் முதல்நாள் விழா கிளிநொச்சியில் இடம்பெற்றது.


குறித்த விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தின் இராசநாயகம் அரங்கில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதல் நிகழ்வான மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து உள்ளுர் கலைஞர் வேல் ஆனந்தனின் ஆடலமைப்பு நெறியாழ்கையில் வவுனியா ஆடலணியினர் வழங்கிய “கரை ஏற மறுக்கும் ஓடங்கள்” எனும் கீழைத்தேச ஆடல் கதை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வினைத் தொடர்ந்து இந்தியாவின் பிரபல கதக் நடனக் கலைஞர் ஜெயசிறி ஆச்சாரியா உட்பட்ட குழுவினரின் கதக் நடன நிகழ்வு நடைபெற்றது.

இந்த விழாவில், பிரதம விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் கலந்து கொண்டதுடன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி பண்பாடலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலை நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் நுண்கலை பீடத்தில் கதக் நடன மற்றும் வீணை இசைப் பயிற்சியும், பிற்பகல் இரண்டு மணிக்கு புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் கதக் நடன அளிக்கை மற்றும் வீணை இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.