முதன்மைச் செயலாளர் நேரு: போராடிய ஸ்டாலின்!
திமுகவின் வெகு முக்கிய பதவிகளான தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என்ற மூன்று பதவிகளை அடுத்து நான்காவதாக இருக்கும் முக்கியப் பதவி தலைமைக் கழக முதன்மைச் செயலாளர்.
(ஜனவரி 26) ஆம் தேதி திருச்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவை தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமித்திருக்கிறார் பொதுச் செயலாளர் க. அன்பழகன்.
1980 களில் இருந்து திமுகவில் தீவிரக் களப் பணியாற்றும் கே.என்.நேரு ஒன்றிய செயலாளர், ஒன்றிய சேர்மன், சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், அமைச்சர் என்று படிப்படியாக பல நிலைகளைக் கடந்து இன்று கட்சியின் நான்காவது முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கிறார். முரசொலியில் இன்று வெளிவந்த இந்த அறிவிப்புக்குப் பின் ஸ்டாலினும் படிப்படியாக போராட்டம் நடத்தியியிருக்கிறார் என்கிறார்கள் திமுக தலைமையில் நடப்பதை கவனிக்கும் நிர்வாகிகள்.
அவர்களிடம் பேசினோம்.
“தேர்தல் வெற்றிகள், பல மாநாடுகளை நடத்தியவர் என்று பல தகுதிகள் இருந்தாலும் நேருவுக்கு திமுகவின் அடிமட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் நெருங்கிய அன்பும், நட்பும் உண்டு என்பதே மிக முக்கிய தகுதி. ஒவ்வொரு நாளும் தொண்டர்களைப் பார்க்காமல் தொண்டர்களோடு பேசாமல் அவர் இருந்ததே கிடையாது.
தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக இப்போது டி.ஆர்.பாலு இருக்கும் நிலையில் கே.என். நேருவையும் இன்னொரு முதன்மைச் செயலாளர் ஆக்கலாம் என்று முதலில் முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின்.
1989 களில் இருந்தே தமிழக அமைச்சரவையில் பொன்முடிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் நேரு. எனவே சீனியாரிட்டி படி நேருவுக்கு முன்னே பொன்முடி இருக்கிறார். சில மாதங்களாகவே பொன்முடியின் ஆதரவாளர்கள் மத்தியில், ‘பொன்முடிக்கு மாநிலப் பதவி தரப் போகிறார் ஸ்டாலின்’ என்ற பேச்சு இருந்தது.
ஆனாலும் கட்சிப் பணிகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பொன்முடியின் சீனியாரிட்டியை தாண்டி நேருவை முதன்மைச் செயலாளராக நியமிக்க முடிவு செய்தார் ஸ்டாலின். இதுபற்றி பொருளாளர் துரைமுருகனிடம் ஸ்டாலின் கேட்டபோது, ‘நேருவை முன்கூட்டியே நாம தலைமைக்குக் கொண்டு வந்திருக்கணும். இப்ப அவரைக் கொண்டுவர்றது ரொம்ப நல்லது’ என்று சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.
ஏற்கனவே முதன்மைச் செயலாளர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு என்ன நினைப்பாரோ என்ற ஒரு நெருடலும் ஸ்டாலினுக்கு இருந்திருக்கிறது. கடந்த வியாழக் கிழமை டி.ஆர்.பாலுவை கூப்பிட்டு, ‘இதுபோல நேருவையும் முதன்மைச் செயலாளராக போடலாம்னு இருக்கேன்’ என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.
அதற்கு டி.ஆர்.பாலு, ‘ஏன் இப்படி பண்றீங்க... என்னோட சீனியாரிட்டி என்ன? ரெண்டு முதன்மைச் செயலாளர்லாம் சரிப்பட்டு வராது. நான் வெறும் எம்பியாகவே இருந்துக்குறேன். என்னை விட்டுடுங்க’ என்று ஸ்டாலினிடம் கோபமும் வருத்தமும் கலந்து சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்டாலின் டி.ஆர்.பாலுவிடம், ‘நேரு என்ன சாதாரண ஆளா? அவரும் தீவிரமான கட்சிப் பணி செய்யக் கூடியவர்தானே, சீனியர்தானே” என்று கேட்க, பதிலேதும் சொல்லாமல் டெல்லிக்குப் புறப்பட்டுப் போய்விட்டார் டி.ஆர்.பாலு.
தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நேருவை அறிவிக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டார் ஸ்டாலின். ஆனால் அங்கே கோபத்தில் இருக்கும் டி.ஆர்.பாலு ஏதாவது பேசி சாதி ரீதியான குரல்கள் எழுந்துவிடுமோ என்று கருதிய ஸ்டாலின், தான் கட்சியின் தலைவராக இருந்தாலும் பாலுவை சமாதானப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து டி.ஆர்.பாலுவின் மகன் ராஜாவை அழைத்தார்.
விஷயத்தை சொல்லி, ‘என்னப்பா உங்க அப்பா கோவிச்சுக்கிட்டு போயிட்டாரு. ரெண்டு முதன்மைச் செயலாளர் போடலாம்னுதானே சொல்றோம். அவரும், நேருவும் இருக்கிறதுல என்ன பிரச்சினை. அவர்கிட்ட பேசு’ என்று சொல்ல ராஜாவும் இதுபற்றி தன் தந்தை டி.ஆர்.பாலுவிடம் பேசியிருக்கிறார். மீண்டும் ஸ்டாலினிடம் வந்த டி.ஆர்.பி. ராஜா, ‘எனக்கு 78 வயது ஆவுது. இப்ப போயி என்கிட்ட இருக்கிற பதவியை பிடுங்கினா எனக்கு என்ன மரியாதை? கொடுத்தா இந்தப் பதவியை எனக்கு மட்டும் கொடுங்க. இல்லேன்னா எதுவும் வேணாம்’ என்று தன் தந்தை சொல்லிவிட்டதாக ஸ்டாலினிடம் தெரியப்படுத்தியுள்ளார் ராஜா. மேலும் அறிவாலயத்தில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த முதன்மைச் செயலாளர் பதவிக்கான அறையில் இருந்த தனது பொருட்களை எல்லாம் டி.ஆர். பாலு கடந்த வியாழக் கிழமை எடுத்துச் சென்றுவிட்டார்.

இதன் பிறகுதான் நேருவை மட்டுமே தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆக்குவதென்று முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதன் பின் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பேசி விளக்கியிருக்கிறார்.
தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் என்பது முக்கியமான பணி. டி.ஆர்.பாலு இப்பதவியில் இருந்த போது தினமும் காலை 9.30 க்கெல்லாம் அறிவாலயம் வந்துவிடுவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி தலைவருக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படித்து அதை உரிய முறையில் தலைவருடன் ஆலோசித்து தீர்த்து வைப்பதுதான் முதன்மைச் செயலாளாரின் பணி. இந்தப் பணியை கே.என்.நேரு தனது அதி தீவிரக் கட்சிப் பற்று, அனுபவம் ஆகியவற்றால் திறம்படச் செய்வார் என்று நம்புகிறார் ஸ்டாலின்.
இதுமட்டுமல்ல... கே.என்.நேரு திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்தபோதிலும் பல்வேறு கட்சிகளின் தலைமைகளுடன் நல்ல தொடர்பும், பழக்கமும் அவருக்கு உண்டு. இதன் மூலம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளிலும் முதன்மைச் செயலாளர் என்ற முறையில் நேருவின் பணி நிறைவாக இருக்கும் என்று நம்புகிறார் ஸ்டாலின்.
திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், “வெகு காலத்துக்குப் பிறகு திமுகவில் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நியமனமாக நேருவின் முதன்மைச் செயலாளர் நியமனம் நடந்திருக்கிறது. கட்சிக்காக யாரையும் விட்டுக் கொடுப்பார். யாருக்காகவும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டார். அப்படிப்பட்ட நேருவுக்கு தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி பொருத்தமானது” என்கிறார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo