இந்திய அணியின் பொறியில் சிக்கிய குப்தில்!!

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின், இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி மதியம் 12:20 மணிக்கு, நியூசிலாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில்  (26.01.2020) துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.


இதுகுறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேய்ன் வில்லியம்சன், "முதல் போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் இந்த போட்டியும் நடைபெறுவதால் அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை," என்றார். மேலும் பேசிய கேய்ன் வில்லியம்சன், "இது போன்ற டி20 போட்டிகளில் வெற்றி வாய்ப்பு என்பது மிகவும் சிறியதாகவே அமையும். இரவு நேரத்தில் பிட்ச்சில் பெரிதும் பனிப்பொழிவு இருக்காது என்பதால், முதலில் பேட் செய்து அதிக ரன்களை இலக்காக கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளோம்," என்றார்.

டாஸ் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, "டாஸை வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்திருப்பேன். சென்ற போட்டிபோலவே இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியான துவக்கத்தைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 230 ரன்களை நியூசிலாந்து அணி எடுக்காமல் இருப்பதற்கு, சென்ற போட்டியில் நாங்கள் விட்டுக்கொடுத்த எக்ஸ்ட்ராஸை இந்த முறை கட்டுப்படுத்துவோம்," என்றார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியின் மார்ட்டின் குப்தில் மற்றும் காலின் மன்ரோ ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினார்கள். வழக்கத்திற்கு மாறாக முதல் ஓவரை இந்த முறை ஷர்துல் தாக்கூர் துவங்கினார். முதல் ஓவரின் 3ஆவது பந்திலேயே மார்ட்டின் குப்தில் சிக்ஸர் அடித்து நியூசிலாந்து அணியின் ஸ்கோர் போர்டை துவங்கியுள்ளார்.

6 ஓவர்கள் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணி 48 ரன்கள் சேர்த்து விளையாடிவருகின்றது. இதில் மார்ட்டின் குப்தில் 33 ரன்களில் கோலியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். முதல் ஓவரிலிருந்து குப்திலுக்கு பந்து வீசிய ஷர்துல் தாக்கூரின் பந்தில் குப்தில் அவுட் ஆகியிருப்பதால், இந்திய அணியின் திட்டம் வொர்க்-அவுட் ஆகிறது எனத் தெரிகிறது.

முதலாம் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், இந்திய அணியை வீழ்த்தமுடியாமல் போய்விட்டது. இந்திய அணிக்காக விளையாடிய கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ரா போன்ற இளம் வீரர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தனர். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.