தர்பார் நஷ்டஈடு யார் பொறுப்பு: லைகாவா? ரஜினியா?

தர்பார் படம் சம்பந்தமாக நமது மின்னம்பலம் தினசரியில் ஏற்கனவே வெளியான கட்டுரைகளில் படத்தின் தயாரிப்பு செலவை விட குறைவாகவே விற்பனை செய்யப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தோம்.


தமிழகத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான லிங்கா, காலா, கபாலி, 2.0, பேட்ட என அனைத்து படங்களின் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் அளவு தான் தயாரிப்பாளருக்கு வருமானம் கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் ரஜினிகாந்த் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே படத்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஒரு வார காலத்துக்கு வேறு படங்கள் போட்டிக்கு இல்லை என்பதால் தர்பார் படம் அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்டது. படம் வெளியான முதல் வாரம் தர்பார் படத்தின் வசூல் விவரங்களை அச்சு ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் மிகைப்படுத்தி வெளியிட்டன. மூன்று வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் தர்பார் படம் வாங்கி திரையிட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக கடந்த ஒரு வார காலமாக தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் லைகா நிறுவனத்தோடு பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், ‘படத்தின் உரிமையை அவுட்ரேட் அடிப்படையில் தான் வியாபாரம் செய்து இருக்கிறோம். நஷ்டம் ஏற்பட்டால் அது எங்களை கட்டுப்படுத்தாது’ என்பதையும் கூறி வியாபாரம் செய்தோம் அதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை எங்களால் திருப்பித் தர இயலாது. ஏற்கனவே படத்தயாரிப்பில் எங்களுக்கு 40 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த விஷயத்தில் எங்களால் எதுவும் செய்ய இயலாது நேற்று(ஜனவரி 29) மாலை கூறிவிட்டனர்.

திருச்சி ஏரியா உரிமையை வாங்கிய அதிமுக பிரமுகர் ஆவின் கார்த்தி தனக்கு நஷ்டஈடு தேவையில்லை என்று கூறியதாக கூறப்பட்டாலும், லைகா நிறுவனம் தயாரித்து வரும் மாஃபியா படத்தின் திருச்சி ஏரியா உரிமையை குறைவான விலைக்கு அவருக்கு வழங்கியுள்ளனர். அதேபோன்று சென்னை நகரத்தில் லைகா நிறுவனத்தின் சார்பில் அதன் வியாபார பொறுப்பாளர் தமிழ்குமரன் நேரடியாக படத்தை வெளியிட்டுள்ளார்.

எஞ்சியுள்ள செங்கல்பட்டு, மதுரை, கோவை, சேலம், வடஆற்காடு, தென்ஆற்காடு, திருநெல்வேலி ஆகிய ஏழு ஏரியாக்களில் தர்பார் படத்தின் உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் இன்று(ஜனவரி 30) பகல் சென்னையில் ஒன்றுகூடி தங்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நஷ்டத்தை சரி செய்து கொடுக்குமாறும், அதற்காக ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து தங்களது நிலையை விளக்குவதற்கு நேரம் ஒதுக்கீடு செய்து தருமாறும் கடிதம் தருவதற்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அமைந்துள்ள ரஜினியின் அலுவலகத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் தர்பார் படத்தின் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. லிங்கா படத்திற்கு ரஜினிகாந்த் நேரடியாக தலையிட்டு ஏற்பட்ட நஷ்டத்தில் 19% வழங்கினார். மேலும் கபாலி படத்தில் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பாளர் வழங்கினார். அதேபோன்று தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை நடிகர் ரஜினிகாந்த் வழங்கப் போகிறாரா அல்லது தயாரிப்பு நிறுவனமான லைகா ஏற்றுக் கொள்ளப் போகிறதா என்பதை தமிழ் சினிமா வட்டாரம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்த செய்தி வெளியாகும் நேரத்தில் அனைத்து விநியோகஸ்தர்களும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஒன்று கூடி இருப்பார்கள்.

-இராமானுஜம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.