பணம் வைத்த சூனியத்தால்..!!

களைப்புத் தீர்க்க மட்டுமே
உறங்கிய விழிகளில்
வழியும் மீதித்தூக்கம்...

துவைத்து
மூன்று நாட்களாகி
முகம் சுழிக்கும் நாற்றமெடுத்தாலும்
சலிக்காமல் போட்டுக்கொள்ளும்
காலுறைகள்...

அவசரத்தில்
விளக்குவதால்
அரைவாசியும் சுத்தமாகாத
அழுக்குப்படிந்த பற்கள்...

அந்தரித்து
நாக்கு வழிக்கையிலும்
சாமங்கடந்து சாப்பிட்ட உணவு
சமிபாடையாததற்கு
சாட்சியாக
ஓங்காளிப்பில் வந்துவிழும்
ஓரிரு கருவேப்பிலையுடனான
வேகக் குளியல்

வெளியே தெரிந்தால்
வெட்கம் கெட்டுப்போகுமளவு
கந்தலான உள்ளாடைகள்...

நாளைக்கு துவைக்கலாம்
நாளைக்கு கழுவலாமென
சேர்த்துவைத்த உடைகள்...

சுற்றுளாவுக்கு அழைத்துச்செல்லாத
ஆசை மகளின்
அன்பு மகனின் அழுகை...

எப்போதுதான்
வீட்டில் நின்று
என்னையும் கவனிப்பீர்களென
ஏக்கமும் எரிச்சலும்பட்டும் வெடிக்கும்
மனைவியின் விம்மல்...

யன்னலோர இருக்கை கிடைத்தும்
இயற்கையை ரசிக்க முடியாத
தூக்கத்தோடு
வேலைக்கான போக்குவரத்து

இப்படி வெளிநாட்டில் இன்னுமின்னும்
ஒருநாள் கூட
வாழ்வை வாழ்வாக வாழத்தெரியாதவனாக
பலரை தன்பின்னால்
இரண்டு வேலையென்ற பெயரில்
ஓட விட்டிருக்கும்
சூனியக்காரி இந்தப் பணம்

வாகைக்காட்டான்
*பெரியகுளம்*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.