தர்பார் நஷ்ட ஈடு: பதிலளிப்பாரா ரஜினி?

ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் மூலமாக ஏற்பட்ட நஷ்டத்திற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாகப் பேச படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் இன்று(ஜனவரி 30) பகல் ஒரு மணிக்கு சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமணமண்டபத்தில் அமைந்திருக்கும் ரஜினிகாந்த் அலுவலகத்திற்குச் சென்றனர். செங்கல்பட்டு ஏரியாவில் தர்பார் படத்தை வாங்கிய காளியப்பன் தலைமையில் அனைத்து ஏரியா விநியோகஸ்தர்களும் சென்று ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் அலுவலகப் பொறுப்பாளர் சுதாகர் அங்கு இல்லாததால் தாங்கள் வந்து சென்ற தகவலைக் கூறுமாறு கேட்டுக்கொண்டனர். அங்கிருந்து நேரடியாக தர்பார் படத்தின் இயக்குநரான முருகதாஸ் அலுவலகம் சென்ற அவர்கள், அங்கேயும் முருகதாஸ் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் நேரடியாக போயஸ் கார்டனில் அமைந்திருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்றனர். ரஜினியை சந்திக்க வந்த நோக்கத்தை தெரிவித்த விநியோகஸ்தர்களிடம், ‘24 மணி நேரம் காத்திருங்கள் ரஜினிக்கு தகவலைத் தெரிவிக்கிறோம்’ என்று ரஜினிகாந்தின் வீட்டில் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெளியில் எப்போதும் இருக்கும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் பேச முயற்சித்தனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்துப் பேசாதவரை ஊடகங்களிடம் எதுவும் பேச வேண்டாம் என்று தாங்கள் முடிவெடுத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, இந்த விஷயம் தொடர்பான அதிகாரப்பூர்வமான செய்தி எதுவும் ஊடகங்களுக்குக் கிடைக்கவில்லை.

தர்பார் திரைப்பட விநியோகஸ்தர்கள், அடுத்த கட்ட நடவடிக்கையாக படம் தமிழகம் முழுவதும் செய்த மொத்த வசூல், வாங்கிய விலை இவை அனைத்தையும் சேகரித்து எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு ‘திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு’க்கு புகார்க் கடிதம் கொடுக்க உள்ளனர். தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களிடம் நட்பு முறையில் பேசுகின்ற போது “நாங்கள் வாங்கிய விலையில் முப்பதிலிருந்து நாற்பது சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படம் வாங்கிய அனைவருமே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில் தொழில் செய்து வருபவர்கள். நாங்கள் கொடுத்த விலைக்கு உரிய தரத்தில் தர்பார் படம் இல்லை. பட வெளியீட்டுக்குப் பின்பு படத்தை பெரிய அளவில் அவர்கள் விளம்பரப்படுத்தவும் இல்லை.

அவுட் ரேட் அடிப்படையில் பணத்தை வாங்கிவிட்டு நஷ்டஈடு கேட்பது வியாபார தர்மம் இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், படத்திற்கான விலை இறுதி செய்யப்பட்ட பொழுது லைகா தரப்பில் தர்பார் படம் உலக தரத்தில் இருக்கும், ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினிகாந்த் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதால் படம் பெரிய அளவில் வசூல் செய்யும் என்ற உத்தரவாதம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் தர்பார் படத்தின் உள்ளடக்கம் அவர்கள் கூறியது போன்று முதல் தரமாக இல்லை. அவ்வாறு தயாரிக்கப்பட்டு அந்த படம் வசூலில் தோல்வியடைந்திருந்தாலும் கூட பரவாயில்லை.

எனவே எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் தயாரிப்பு நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் முருகதாஸ் மூவரும் இணைந்து நல்லதொரு முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி எதுவும் நடைபெறாத பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும். அது எந்த வகையில் எப்படி இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது” என்று கூறினார்கள்.

-இராமானுஜம்
நன்றி மின்னம்பலம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.