ரஜினியின் மௌவுனம் கலைத்த ராமதாஸ்!

நடிகர் ரஜினிகாந்த் சில கருத்துக்களை திட்டமிட்டு பேசிவருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலம் நகரில் ராமர், சீதா ஆகிய இந்துக் கடவுளர்களின் நிர்வாண படங்களை பெரியார் ஊர்வலமாக எடுத்துச் சென்று செருப்பால் அடித்ததாக பேசினார். இதற்கு ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளில் இருந்து கண்டனம் எழுந்தது.

ஆனால், இந்திய அளவில் முக்கிய பிரச்சினைகள் குறித்த தனது கருத்துக்களை அறிக்கை வாயிலாகவும், ட்விட்டர் பதிவுகள் வாயிலாகவும் தெரியப்படுத்தும் பாமக நிறுவனர் ராமதாஸ், தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் பாமகவின் சார்பிலும் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

பெரியாரை பாமகவின் கொள்கை முன்னோடிகளில் ஒருவர் என்று சொல்லும் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் அவருக்கு சிலையும் அமைத்துள்ளார். அண்மையில், பெரியார் குறித்து தமிழ்நாடு பாஜக ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையாக பதிவிடப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். ஆனால், ரஜினிகாந்த் பேசி 10 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில், ராமதாஸின் மவுனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் பெரியார்-ரஜினி விவகாரம் தொடர்பான தனது மவுனத்தைக் கலைத்துள்ளார் ராமதாஸ்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 26) செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸிடம், ரஜினி கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நடிகர் ரஜினிகாந்த் எப்பொழுதும் நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு உரிய பதிலை அளிக்க மாட்டார். மழுப்பலாக பேசிவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால், சமீபகாலமாக சில கருத்துகளை திட்டமிட்டு பேசுகிறார். பெரியார் குறித்து அவர் பேசிய கருத்துக்களை தவிர்த்திருக்கலாம். தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள், அவரை அவமதிப்பு செய்பவர்கள் காட்டுமிராண்டிகள். அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய ராமதாஸ், குரூப்-4 தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.