விமலின் குற்றச்சாட்டுக்களுக்கு சபையில் சம்பந்தன் தக்க பதிலடி !


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் கொழும்பில் சொகுசு பங்களாவையும் அதிசொகுசு வாகனங்களையும் சுவீகரித்துவிட்டார் என்று அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு, சபையில் இன்று  விளக்கவுரையுடன் பதிலடி கொடுத்தார் சம்பந்தன் எம்.பி.

அந்த விளக்கவுரையில் அவர் தெரிவித்ததாவது:-

"சபாநாயகர் அவர்களே! 2015 செப்டெம்பர் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள்  என்னை அங்கீகரித்தீர்கள்.

அப்போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக  சம்மிட் பிளட்ஸ் 2 டி வீட்டில்  இருபது வருடங்களுக்கு மேலாக  நான்  வசித்து வந்தேன். அந்த வீட்டில் ஒவ்வொரு முறையும் நுழையும்போதும்  வெளியேறும் போதும்  60 – 70  படிகள் ஏறி இறங்கினேன். எனது வயது முதிர்வினால் எனக்கு இது மிகவும்  அசௌகரியமாகவும் சிரமமாகவும் இருந்தது. எனினும், நான் அதனைத் தாங்கிக் கொண்டேன்.

நான் எதிர்க்கட்சித் தலைவராகி இரண்டு வருடங்கள் கழிந்த  பின்னர்  2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே  எதிர்க்கட்சித் தலைவருக்குரிய வீடு எனக்கு வழங்கப்பட்டது. எனவே, இரண்டு வருடங்களின் பின்னர், 2017 செப்டெம்பர் மாதத்திலேயே நான்  அந்த வீட்டில் குடிபுகக் கூடியதாகவிருந்தது.

எனக்கான ஒரு வீட்டை அவர்கள் தேடியபோது,  நான் ஒரு வீட்டை வாடகைக்குப் பெறலாம் என்று  முன்னாள் ஜனாதிபதி  ஆலோசனை தெரிவித்தார்.  அது ஏற்படுத்ததக்கூடிய பெரும்  செலவைக் கருத்தில்கொண்டு  நான் அதனைச் செய்ய விரும்பவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு வழங்கப்பட்ட  ஏனைய வசதிகள் இந்த வீட்டுக்கும் அதன் பணியாளர்களுக்கும் உரியனவாகும்.

எதிர்க்கட்சித் தலைவர்  வீட்டில் தொடர்ந்து குடியிருப்பதற்கு  அனுமதிக்குமாறு நான் சபாநாயகர் கரு ஜயசூரியவையோ அல்லது  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையோ அன்று கோரவில்லை.  அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை எதுவானாலும்,  அதனை அவர்கள் தமது சொந்த விருப்பத்துக்கமையவே   செய்தனர். எனக்குத் தொடர்ந்து கிடைத்த ஏனைய வசதிகளும் அந்தத் தீர்மானத்துக்கு அமைவானவையேயாகும்.

2018 ஒக்டோபர்  அரசமைப்பு  நெருக்கடியைத் தொடர்ந்து,  அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அப்போதைய  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது பதவிகளைப் பரிமாறிக்கொண்டனர். இது அதே காலத்தில் இடம்பெற்றது.

அதே காலத்தில்  எதிர்க்கட்சித் தலைவர்  பதவியிலிருந்து  நான் நீக்கப்பட்டமையும் இடம்பெற்றது.

இதுவரை குறிப்பிடப்படாத ஒரேயொரு மற்ற வசதி சி.ஏ.ரி. 1094 என்ற  இலக்கம் கொண்ட வாகனமாகிய  ஒரு பென்ஸ் மோட்டார் கார் ஆகும்.  இவ்வாகனம் 2017.01.30 ஆம் திகதி எனக்கு வழங்கப்பட்டது.  இவ்வாகனத்தை நான் 2019.01.07ஆம் திகதி  புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு (மஹிந்த ராஜபக்சவுக்கு) அனுப்பினேன்.

இவ்வாகனம் எனது பாவனையில் இருந்த  இரண்டு வருட காலத்தில் அது 2082 கிலோ மீற்றார் தூரமே  ஓடியுள்ளது.  எவ்வளவு சிக்கனமாக  அவ்வாகனம் பயன்படுத்தப்பட்டது என்பதை இது காட்டுகின்றது.

நடந்தவைகளினால் நான் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளேன். இந்த அவலட்சனமான நிலைமை தொடரக்கூடாது" - என்றார்.
Blogger இயக்குவது.