நடிகர் அதர்வா, இருபத்து நான்கு மணிநேரத்திற்கும் மேலாக துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்துள்ளார்.
கட்டலகொண்டா கணேஷ் என்னும் தெலுங்கு திரைப்படத்தைத் தொடர்ந்து, அதர்வா தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துவருகிறார். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அஸர்பைஜானில் நடைபெற்றுவரும் நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக அதர்வா துபாய் விமான நிலையம் சென்றுள்ளார்.
ஆனால் துபாயில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, வேறு எங்கும் செல்ல முடியாமல் அவர் விமான நிலையத்திலேயே சிக்கி தவித்துள்ளார். கடந்த இரு நாட்களாக துபாயில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை நீர் குளம் போன்று தேங்கி நின்றது. இதன் காரணமாக பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
கடும் மழையாலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாகவும் நடிகர் அதர்வா அங்கு சிக்கித் தவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை(ஜனவரி 11) அங்கு சென்ற அவர் நாள் முழுவதும் அங்கேயே காத்திருந்தார். பின்னர் விமான ஓடுபாதைகள் சரிசெய்யப்பட்டதன் பின்னரே அவர் அங்கிருந்து கிளம்பி அஜர்பைஜான் சென்றுள்ளார்.
வருகிற 28ஆம் தேதி வரை அஸர்பைஜானில் இந்தப்படத்தின் படபிடிப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன், அமிதாஸ் பிரதான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை