ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா அதிகாரபூர்வமாக வெளியேறியது!!

நீண்ட இழுபறிக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது.


கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்து வந்த பிரித்தானியா, ஒன்றியத்திலிருந்து வெளியேறும் இந்த வரலாற்று நிகழ்வு லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் பிரித்தானியாவில் கொண்டாட்டங்களும், பிரக்ஸிட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்கொட்லாந்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும், லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு சில நிமிடங்களுக்குமுன், இதுதொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பலருக்கு இது நம்பிக்கையின் வியக்கத்தக்கத் தருணம் என்றும்  இந்த தருணம் ஒருபோதும் வராது என்று நினைத்திருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த முடிவால் பலர் கவலை மற்றும் இழப்பை உணர்ந்திருப்பார்கள் என்று குறிப்பிட்ட பொரிஸ் ஜோன்சன், மூன்றாவதாக உள்ள ஒரு குழுவினர் இந்த மொத்த அரசியல் சண்டை சச்சரவுகளும் ஒருபோதும் முடிவுக்கு வராது என்று கவலைப்பட ஆரம்பித்ததாகவும், அனைத்து மக்களின் உணர்வுகளையும் தான் புரிந்துகொண்டு தன்னுடைய அரசு இதை ஒற்றுமைப்படுத்தி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா நேற்று வெளியேறியது.

பிரித்தானியா வெளியேறுவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 27ஆகக் குறைந்துள்ளது.

ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இடம்பெற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் நடத்தப்பட்டது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமென வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.