வில்லிசைக்கு சின்னமணி!!

வில்லிசைக் கலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அக்கலையை எழுச்சி கொள்ளச் செய்தவர் சின்னமணி அவர்கள். வில்லிசை என்றால் சின்னமணிதான் என்று அனைத்து நிலையினரும் மனம் விட்டுக் கூறும் அளவிற்கு புகழின் உச்சத்தைத் தொட்டவர். நூற்றுக் கணக்கான வரலாறுகளை அழகுற வில்லிசையாக்கி ஆயிரக்கணக்கான மேடைகள் கண்ட வில்லிசைக் கலையின் முடிசூடா மன்னவன் அவர். ஈழத்துக் கலைவானில் சூரியன் போல் பிரகாசித்தவர். வில்லிசைக் கலைக்கென்றே தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவருக்கு நிகர் அவரே தான்.


அவரைப் பற்றிய சிறு அறிமுகம் பெயர் : க.நா. கணபதிப்பிள்ளை சின்னமணி பிறப்பு : 30.03.1936 இறப்பு : 04.02.2015 தந்தை பெயர் : கணபதிப்பிள்ளை நாகலிங்கம் தாய் பெயர் : இராசம்மா நாகலிங்கம் பிறந்த ஊர் : யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப்பகுதியில் இருக்கும் கலைவளம் நிறைந்த சிற்றூரான மாதனை என்னும் கிராமம். காத்தவராயன் கூத்து, இசைநாடகம், சிற்பம் போன்ற துறைகளில் ஈழத்தில் புகழ் ப+த்த கலைஞர்கள் பலரைப் பிரசவித்த ஊர் அது சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (பிறப்பு: மார்ச் 30, 1936) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞர். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர். சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 9 வயதிலேயே குறவன் குறத்தி என்ற நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார். யாழ் கலாசேத்திராவில் வி.கே.செல்லையாவிடம் கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட சின்னமணி, அவரின் வழிகாட்டலுடன் 1949 ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற கப்பற்பாட்டு நாடகத்தில் நடித்தார். 1951 ஆம் ஆண்டு முதல் கலையுலகில் நுழைந்த சின்னமணி பல மூத்த பெரும் கலைஞர்களோடு இணைந்து நடித்தார். வீரமைந்தன், சரியா தப்பா, தில்பு சுல்தான் ஆகிய சமூக நாடகங்களிலும், காத்தவராயன், அரிச்சந்திரா, ஸ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி போன்ற சரித்திர நாடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட இவர் சிறுவயது தொடக்கம் எல்லோராலும் சின்னமணி என்றே அழைக்கப்பட்டார்.

துப்பதாகே துக்க என்ற சிங்களத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் கோவில் திருவிழாக்களிலும், பொதுக் கலை நிகழ்வுகளிலும் இடம்பெறும் சின்னமணி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சிகளைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர். 1954 ஆம் ஆண்டு இரத்மலானை, கொத்தலாவை போன்ற இடங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவுப் பண்ணைப் பால் சபையில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார். 1960 ஆம் ஆண்டு ஆசிரியையான அன்னமுத்து என்பவரைத் திருமணம் புரிந்த சின்னமணிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

கலைத்துறைப் பிரவேசம் :
தனது எட்டாவது வயதில் குழந்தைக் காத்தானாக நடித்துப் புகழ் பெற்று, நாடகத்துறையிலும் கல்வியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்வராகவே வளர்ந்து வந்தவர். தமிழ் மொழியில் பெரும் புலமை கொண்டிருந்த தனது தாயிடமும் தந்தையிடமும் தமிழையும் புராண இதிகாச வரலாறுகளையும் குருகுலத்தில் கற்பதைப்போன்று கற்றதுடன் தனது மாமனாரான கீதாஞ்சலி வி.கே.நல்லையா (நாட்டியக் கலைஞர்) அவர்களிடம் நடனத்தையும் இசையையும் கற்றுக் கொண்டார். பாடசாலைப் படிப்பைச் செவ்வனே முடித்துக் கொண்ட பின் 1957இல் ஆசிரிய நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ்ப்பாடசாலையில் தமிழ், ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார்.

நாடகத்துறை ஈடுபாடு சிறு வயதில் இருந்து நாடக நடிகனாக வளர்ச்சி கண்டு வந்த இவர் கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ்ப+த்த நாடக மேதைகளான ரீ,கே,சண்முகம் சகோதரர்களுடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற நாடகங்களில் பங்குகொண்டதுடன் இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். அத்துடன் அக்காலத்தில் கொழும்பில் தங்கியிருந்து நாடகங்களை மேடையேற்றிவந்த திரைப்பட நடிகரும் வில்லிசையாளருமான கலைவணர் என்.எஸ்.கிருஸ்ணனுடன் தங்கியிருந்து நாடக உத்திகளையும் வில்லிசையின் நுட்பங்களையும் கற்றுக்கொண்டார். வண்ணை. கலைவாணர் நாடக மன்றத்தின் உருவாக்க உறுப்பினர்களுள் ஒருவரான இவர் இம்மன்றத்தால் பல தடவைகள் மேடையேற்றப்பட்ட திப்புசுல்த்தான், வீரமைந்தன், இன்பக் கனவு போன்ற நாடகங்களில் முக்கிய நடிகராகச் சிறப்புற நடித்துத் தனது நடிப்புத் திறனை அற்புதமாக வெளிப்படுத்தி நாடகத்துறையில் ஆழமாகக் கால்பதித்துக் கொண்டார்.

வில்லிசைத் துறை ஈடுபாடு : இவ்வாறு நாடகத்துறையில் துறைதோய்ந்த நடிகனாக விளங்கிய இவர் அக்காலத்தில் ஈழத்தில் வில்லிசை நிகழ்வுகளை வழங்கிவந்த திருப்ப+ங்குடி ஆறுமுகம் அவர்களின் நிகழ்வில் நகைச்சுவையாளனாகவும் பக்கப்பாட்டுக்காரனாகவும் உடுக்கிசைக் கலைஞனாகவும் வில்லிசை அரங்கைப் பல ஆண்டுகளாகச் சிறப்பித்து வந்தார். தனித்துவமான வில்லிசையாளனாக உருக் கொண்டார். நடிப்பு, இசை, நடனம், தமிழ், சமயம், போன்ற அனைத்திலும் ஒப்பற்ற திறன் கொண்டவராக விளங்கிய இவர் ஹார்மோனியக் கலைஞர் நல்லூர் சோமசுந்தரம், எஸ்.ரி.அரசு ஆகியோரின் துணையுடனும் குருவாக விளங்கிய திருப்ப+ங்குடி ஆறுமுகத்தின் ஆசீர்வாதத்துடனும் தனித்துவமான வில்லிசைக் கலைஞனாக 02.02.1968 அன்று மாலை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய முன்றலில் பெருந்திரளான கலைஞர்கள், பொதுமக்கள், ஆர்வலர்கள் முன்னிலையில் கலைவாணர் வில்லிசைக் கழு என்னும் பெயரோடு வில்லிசைக் கலைஞனாக அரங்கேற்றம் கண்டார்.

புகழ் பெற்றது வில்லிசை பல்துறைத் திறன் கொண்ட இவர் வில்லிசை நிகழ்வின் நாயகனாக அமர்ந்து கதையைச் செல்லும் முறையும் நவரசபாவங்களை முகத்தில் காட்டும் அழகும் கதையில் வருகின்ற பாத்திரமாக மாறி நடிக்கும் திறனும் தமிழை அழகுற உச்சரிக்கும் பாங்கும் பொருளுணர்ந்து பாடல்களைச் சுருதி லயம் பிசகாமல் பாடும் இனிமையும் சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவையும் எவரும் எதிர்பார்க்காத விதத்தில் உதிக்கும் கற்பனையும் இவரது தனித்துவப் பண்புகளாக வில்லிசை நிகழ்வுகளில் பொங்கிப் பிரவகித்த போது மக்கள் தம்மை மறந்து இரசித்தனர். இவரது வில்லிசை மாபெரும் புகழைத் தேடிக் கொண்டது.

மரபு வழியான கலைநிகழ்வுகளே முழுமையாக ஆலயத் திருவிழாக்களில் இடம்பெற்று வந்த அக்காலத்தில் இவரால் தொடங்கப்பட்டுப் புதுமையாக உருவாக்கப்பட்ட வில்லிசையானது பெரும் வரவேற்பைப் பெற்றது. இ;க்கலைக்கெனத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த இவர் தமிழர்களால் விரும்பப்படும் கதைகள் அனைத்தையும் வில்லிசை வடிவில் உருவாக்கிச் சிறப்புற நிகழ்த்தி வந்தார். இராமாயணம், மஹாபாரதம், கந்தபுராணம், பெரியபுராணம், ஐம்பெரும் காப்பியங்கள் போன்றவற்றையும் தமிழ் இலக்கியப் பரப்பில் சிதறிக் கிடக்கின்ற நூறிற்கும் மேற்பட்ட வரலாறுகளையும் வில்லிசையாக்கி தொடர் நிகழ்வுகளாக நிகழ்திச் சாதனை படைத்தவர். இவ்வாறான வரலாறுகளை வில்லிசையாக நிகழ்த்தும்போது கதையில் வருகின்ற அத்தனை பாத்திரங்களாகவும் அப்படியே மாறிவிடும் இயல்புடையவராக இவர் இருப்பதனால் படித்தவர் முதல் பாமரர் வரையான அனைவரும் இவரது வில்லிசையை மெய் மறந்து இரசித்தனர், போற்றினர், புகழ்ந்தனர்.
சென்ற நாடுகள்

ஈழத்தின் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றது மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்ப+ர், கனடா, சுவிஸ் போன்ற நாடுகளிலும் பல மாதங்கள் தங்கியிருந்து நிகழ்வுகளை வழங்கியவர்
இசைநாடகத் துறை இவ்வாறு வில்லிசைத்துறையில் சரித்திரம் படைத்த கலைஞராக இருந்த போதிலும் இசைநாடகத் துறையிலும் தன்னிகரற்ற கலைஞராக விளங்கியவர். இசைநுட்பம் நிறைந்த பாடல்களையும் பல வரலாறுகளை எடுத்துரைக்கின்ற நீண்ட வசனங்களையும் கொண்டமைந்த பாத்திரமான இயமனாக நடிப்பதில் தனித்துவமான பாணியை ஏற்படுத்திப் பல இளம் நடிகர்களிற்கு எடுத்துக்காட்டாக நடித்துக் காட்டியவர். இயமனாக நடிப்பது எப்படி என்பதற்கு இலக்கணம் வகுத்தவர். மேலும் நட்சத்திரத் தரகர், தோட்டி, சத்தியகீர்த்தி போன்ற பாத்திரங்களிலும் தனித்துவம் பெற்றவர். சுருதி சுத்தமாகக் காத்தவராயன் கூத்தைப் பாடி நடிக்கும் திறன் கொண்ட சிலருள் முதன்மையானவர்.


சின்னமணி கணபதிப்பிள்ளை அரச சேவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1957 இல் ஆசிரிய நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ் பெற்ற நாடக மேதைகளான ரீ.கே.எஸ். சகோதரர்களுடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற நாடக நிகழ்வுகளில் பங்கு கொண்டார். கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும் வில்லிசை நுட்பங்களையும்கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட இவர் வண்ணை. கலைவாணர் நாடக மன்றத்தின் உருவாக்க உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் வில்லிசைத்துறையில் புகழ்பெற்றிருந்த திருப்பூங்குடி ஆறுமுகத்துக்குப் பக்கப்பாட்டுக் கலைஞராகவும் நகைச்சுவையாளராகவம் பணியாற்றிப் பின் அவரது ஆசீர்வாதத்துடன் 02.02.1968 இல் செல்வச்சந்நிதி சந்நிதானத்தில் தான் தலைமையேற்று முதல் வில்லிசை நிகழ்ச்சியை நடாத்தினார். தான் அமைத்த வில்லிசைக் குழுவுக்குத் தனது ஆதர்சக் கலைஞராகிய கலைவாணரின் பெயரைச் சூட்டினார்.

வில்லிசை என்றால் சின்னமணி என்னும் அளவிற்கு இவரது புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. தமிழ்ப் புராண, இதிகாச, காப்பியங்களில் இருந்து சமூகம் கற்க வேண்டிய செய்திகளை நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புக்களில் மேற்கொண்டுள்ளார். வில்லிசையின் ஊடாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டிருக்கிறார். படித்தவர்களும் பாமரர்களும் இரசிக்கும் படியாக வில்லிசை மூலம் கதை சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது இவரது பலம் ஆகும். வில்லிசையில் மாத்திரமன்றி மரபு வழி நாடகத்துறையிலும் ஆளுகை பெற்றுள்ளார். காத்தவராயன் கூத்து மற்றும் இசை நாடகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் இவர் ஏற்கும் இயமன் வேடத்தைக் கண்டு சபையோர் கலங்குவர். அவ்வளவிற்குத் தன்னை மறந்து கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கும் சுபாவம் கொண்டவராகச் சின்னமணியை இனங்காட்டலாம்.

பெற்ற பட்டங்கள் பல விதமான பட்டங்களைத் தமிழர்கள் அவரிற்குச் சூட்டி மகிழ்ந்தனர். அவற்றுள் சில வில்லிசைப் புலவர், கலாவினோதன், முத்தமிழ் மாமணி, வில்லிசை வேந்தன், வில்லிசைச் சக்கரவர்த்தி, வில்லிசைத் திலகம், பல்கலை வேந்தன், முத்தமிழ் வித்தகன், ஜனரஞ்சக நாயகன், வில்லிசைப் பேரொளி, நவரசக் கலைஞன்

சின்னமணி நா.கணபதிப்பிள்ளையின் கலைச்சேவைகளுக்காகக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும் எண்ணிலடங்காதவை. வில்லிசை வேந்தன், வில்லிசை மன்னன், வில்லிசைப் புலவர், முத்தமிழ் மாமணி, வில்லிசை அரசன், வில்லிசைக் கலைஞானசோதி, பல்கலைவேந்தன், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், ஜனரஞ்சக நாயகன், கலாவினோதன் என்பன அவற்றுட் சிலவாகும். இவரது பெயரின் அடையாகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் கலாவினோதன் என்ற பட்டம் 30.06.2002இல் கனடாவில் வழங்கப்பட்டதாகும். 1998 இல் இலங்கை அரசின் கலாபூஷண விருதையும் 2003 இல் வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார். சின்னமணியின் வாரிசுகள் இன்று எம்மண்ணில் வில்லிசைக் கலையை வளர்த்து வருகின்றனர். அச்சுவேலியின் கலை அடையாளம் சின்னமணி என்றால் மிகைப்படாது.
நமது தாயகத்தின் தேசியக் கலைஞரான இவரது மறைவு ஈழத்தின் கலைத்துறையில் ஈடுசெய்து கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. ஊரெங்கும் ஒலித்து நம் இதயங்களில் பதிந்த குரல் அமைதியடைந்து விட்டது.

” ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம் பலவன் ஞானகுரு வாணியை முன்னாடு..” என்று தாயகம் முதல் புலம்பெயர் தேசம் எங்கும் மேடைகளில் கம்பீரமாக ஆரம்பித்த அந்தக் குரல் இன்று ஓய்ந்துவிட்டது! நான் மட்டுமல்ல எனது வயதைச் சேர்ந்தவர்கள் பாடசாலை நாட்களில் வில்லிசையை இரசிக்கக் காரணமானவர் சின்னமணி. எண்கள் பாடசாலை நாட்களில் கோவில் திருவிழாக்களின் பொழுது நாதஸ்வரக் கச்சேரி தொடங்கிச் சிலநிமிடங்களில் உறங்கும் நாம் மேளச் சமா விறுவிறு ப்பாயிருந்தால் எழும்புவது வழக்கம். அல்லது சின்னமணி வந்தால் தான் உஷா ருடன் எழும்பியிருப்போம். எனது காலத்தில் நாம் ஒன்றாயிருந்து வில்லுப்பாடுப் பார்த்தவர்கள் இன்று என்னுடன் இல்லை. அப்படி நினைக்கும்போது ஒன்று என் மனதில் பட்டது- எத்தனையோ பேரை அவர் வயது பால் வித்தியாசமின்றி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார். அவருக்கு முன்னர் அவரை ரசித்த பலர் போய் விட்டனர். அவர் இப்பொழுதுதான் மேடையிலிருந்து இறங்கிப் போகிறார். அதுமட்டுமல்ல – நான்கு தலைமுறைக்கு மேலாக இவராலும் மற்றும் அச்சுவேலி ராஜ் நாடகக் கலாமன்ற சக்கடத்தார் போன்றவர்களால் தமிழ்ச் சமூகம் சிரித்துச் சுவைத்து மகிழமட்டும் முடிந்தது .ஆனால் அரசியல் ரீதியாக அதற்கு இன்னமும் சிரிக்க முடியவில்லை -என்பதையும் அன்னாரது பிரிவு ஒரு சமூகம் சார் செய்தியாக நமக்குத் தந்துள்ளது. நெல்லியடி முருகன் கோவிலுக்கு அடிக்கடி வருவார் சின்னமணி.

நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலய உறசவம் போல யாழ் குடாநாட்டின் பல ஆலயங்களின் முன்றல்கள் தோறும் அவரது வில்லிசை நிகழ்சிகள் இடம்பெற்றிருக்கின்றன . சிறந்த நாடகக் கலைஞர் என்பதால் வில்லடிப் பவராக மட்டுமன்றி அந்த அரங்கத்தை ஒரு கலையரங்கமாகவே தமது முக அங்க அசைவுகளால் மாற்றி ரசனையை தம்மீது வசீகரித்துக் கொண்டு தமது வில்லிசையால் அந்தக் கணங்கள் முழுவதையும் ஆட்சி செய்தவர் சின்னமணி! தூங்கியவர்கள் எல்லோரையும் தமது நகைச்சுவையால் எழுப்பி வைத்து அடுத்த நிகழ்ச்சியான ராஜன் கோஷ்டி அல்லது கண்ணன் கோஷ்டியைப் பார்ப்பதற்கு அவர்களைத் தயார்ப்படுத்திச் சென்றவர் சின்னமணி! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கவலைகளில் ஒன்று தாம் பெண் வேடம் போட்டு நடிக்க முடியவில்லை என்று . பெண்ணாக ஆண் ஒருவர் நடித்தால் அவர் ஒரு சிறந்த கலைஞர் என்பதுண்டு.

சின்னமணி வில்லிசையின் பொழுது சொல்ல வந்த கதையின் பாத்திரங்களாகவே தாம் மாறுவதுடன் வள்ளி ,சீதை ,சந்திரமதி போன்ற பாத்திரங்களாகவே மாறி ரசிகர் மனங்களில் கதையினைப் புகுத்திய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் அன்னாரது சந்திரமதியும் சாவித்திரியும் அங்க அசைவில் முக பாவனையில் வித்தியாசமானவர்கள் என்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒருமுறை சொன்னது ஞாபகம். அதுபோல கிறிஸ்துராஜா பற்றிய தமது வில்லிசைக்கு கிறிஸ்து பிறந்த செய்தியைக் கேட்ட ஏரோதுவின் அங்க அசைவுகள் எப்படி இருக்கும் என்பதை தமது ஊரிலிருந்த தாவீது அடிகளாரிடம் (யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைக் கண்டபின்னர் மறுநாள் உயிர் நீத்தவர்)

சின்னமணி அவர்கள் கொழும்புக்கு வந்தால் அவரைப் போய்ச் சந்தித்துப் பேசுவதில் அலாதியின்பம் ! பல கதைகள் பேசுவார். அறிவுக்குகந்த அவரது நகைச்சுவை மிக்க அனுபவப் பகிர்வுகள் எனது கலை வாழ்வுக்கு வளமூட்டியவை என்றால் மிகையல்ல. நேரம்முகாமைத்துவம் என்ற விடயத்தில் அவர் அக்காலத்திலேயே எவ்வளவு திடமாக இருந்தார் என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் குறிக்கலாம் 1. ரூபவாஹினிக்கு கலையரங்கம் நிகழ்ச்சிக்கு வில்லிசை வழங்கும்போது அவற்குக் கொடுக்கப்படும் நேர அளவு 23 நிமிடங்கள் கடைசி எழுத்தோ ட்டத்தையும் போட்டு முடிக்க 25 நிமிடங்கள் வரும். ஒரு செக்கண்ட் கூட கூடக்கூடாது என்பது நிலைய முறைமை. அரை மணி நேர நிகழ்சிகளுக்கு அதுவே நேர அளவு ஆகும்.


சின்னமணி எமக்கு வழமைபோல ஐந்து நிமிடம் வர முன்னர் ஒரு “சிக்னல்” (சைகை) மட்டும் தந்தாள் போதும் என்பார் .அதுபோலவே 22க்கும் 23 மூன்றுக்கும் இடையில் சரியாக முடித்திருப்பார். திருவிழாவில் இரண்டு மூன்று மணி நேரம் செய்த நிகழ்ச்சியை தொலைகாட்சிக்கு இரண்டு அங்கமாக ஒரு மணி நேரத்தில் செய்து தருவார். மீண்டும் எடிட் செய்கின்ற வேலை எமக்கு இருப்பதில்லை. 2. அந்த நாட்களில் யாழ் குடா நாட்டில் பல ஆலயங்களில் திருவிழாவுக்கு இவரை அழைத்திருப்பார்களாம் ஒருவருக்கும் குறை வைக்காமல் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே வீடு திரும்புவார் என்றார். அதற்கேற்றபடி சில இடங்களில் வில்லிசையில் பாடல்கள் குறைந்து நகைச்சுவை கூடி விடயதானம் வழுவாமல் ரசிகர் மனங்களை குறை சொல்லவிடாமல் தமது கலைப் பணியைச் செய்துள்ளார்.

அவரது வில்லிசைகளை மாதனையூரைச் சேர்ந்த தொழிலதிபர் சதா அவர்கள் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார். அத்துடன் அவருக்கு மணி விழா ஒன்றையும் நடத்தி மலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இவை ஆவண மாக்கப்படவேண்டியவை. தேசிய அரசால் முடியாத காரியமாயினும் மாகாண சபை அல்லது பிரதேச சபை ஒன்றாவது அன்னாரின் கலைப் படைப்புக்களையும் அவரது ஆவணங்களையும் பதிவு செய்தல் வேண்டும் என்பது எனது அவா! அவரது நகைச்சுவைகள் பல யதார்த்த மானவை பார்க்கும் ரசிகப் பெருமக்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்தவை ! அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு சொல்லி இக்குறிப்பை முடிக்கிறேன்:- ஒரு வில்லிசையில் சொன்னார்:- தபாற்சேவை பற்றிய அவரது நகைச்சுவை. கொழும்பிலிருந்து சின்னமணி க்கு ஒரு தந்தி வந்ததாம். தந்தியில் முகவரி சின்னமணி , அச்சுவேலி என்று இருக்கவேண்டும் ஆனால் தந்திய எழுதிய தபால் ஊழியர் ” அச்சுமணி , சின்ன வேலி ” என்று எழுதிவிடாராம். எப்படியோ தந்தி தமக்கு வந்து சேர்ந்ததாம் . ஏனெனில் தலைமைக் கந்தோரில் உள்ள தபால் அதிபர் சொல்லியிருப்பராம் .. அச்சுமணி என்று ஒரு பெயர் இல்லை “சின்ன வேலி” என்று ஒரு ஊரும் யாழ்பாணத்தில் இல்லை. அதால இது எங்கட “சின்னமணி” க்குத்தான் அதால இது ” அச்சுவேலி” க்குத்தான் -போகவேண்டும் …என்று ! ஆம் ! “சின்னமணி” என்றாலே அவர் ஒருவர் தான் என்பதை தமது கலைத் திறத்தால் நிலைநாட்டிச் சென்றவர் .

அப் பெயரே அவருக்கு உரிய பெரும் விருதாக அமைந்தது பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்ற வானிலும் நனி சிறந்தனவே ! என்பதை நினைவூட்டி நிற்கும் ஒரு கலைஞராக நம் முன் இன்று நிற்கிறார் பெரியார் சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்கள்! நீண்ட நேரம் கதை சொல்லிய தமது வில்லிசையின் இறுதியில் அவர் தமது கண்ணீர்க் குரலில் “…நமபார்வதி பதயே! ஹர ஹர மஹாதேவா! ” என்ற குரல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! என்றும் அழியாது அவர் புகழ்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.