வறிய நிலையிலுள்ள பல்கலை,மாணவர்களுக்கு ஈலிங்,ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயம் நிதியுதவி!!

யாழ்,பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு லண்டன் – ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தால் நிதி வழங்கும் ஆரம்ப நிகழ்வு, இம்மாதம் 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 .00 மணிக்கு கோணாவளை வீதி கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள யாழ்விஷன், கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் யாழ் அரசாங்க அதிபர் நா.வேதநாயகம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையின் நிறுவனர் சுசீந்திரன், நல்லூர் பிரதேச செயலகத் தவிசாளர் தியாகமூர்த்தி, வடமாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் தவராசா, லண்டன் சைவ முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் நல்லை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சின்மயாமிஷன் ஸ்வாமி சிதாகாசானந்தா, சிவஸ்ரீ இ.சுந்தரேஸக்குருக்கள், சிவஸ்ரீ தி. உமாசுதக்குருக்கள், சிவஸ்ரீ ந. குமரகுருபரசிவாச்சாரியார் முதலான மதத் தலைவர்கள், சிவாச்சாரியார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பயன்பெறும் பல்கலைக்கழக மாணவர்களும் பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகளுமாக சுமார் நூற்றுக்கும் அதிகமான மக்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர்.

மாணவர்கள் கல்வி கற்கும் பொருட்டு ஸ்ரீ கனகதுர்க்கை அன்னையின் நல் உள்ளம் படைத்த லண்டன் பக்தர்களின் நிதி  ஆலயத்தின் ஊடாக வறிய மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபாய் 3000/= வீதம் சுமார் 300 மாணவர்களுக்கு வழங்கப்படும்.

நிதிஉதவியைப் பெறவந்த மாணவி ஒருவர் கூறுகையில்; உலகத்திலே வெவ்வேறு மதத்தினர்  தமது மதத்தைப் பரப்பும் உள்நோக்குடன் நயவஞ்சகமாக ஏழைகளிற்கும் மாணவர்களுக்கும் நிதியுதவி, பொருளுதவி, கல்விசார் உதவிகளை வழங்கி அவர்களின் வலையில் சிக்க வைத்து மதமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அன்னையின் ஆலயமானது வறிய மாணவர்களின் கல்விசார், வாழ்வியல் முன்னேற்றத்தின் நலனை மட்டுமே கருதி தர்மவழியில் தொண்டாற்றி வருவதைப் பெருமையுடன் தெரிவித்தார்.

மேலும் கனகதுர்க்கை ஆலயத்தின் சேவையானது ஈழத்தில் வாழ்கின்ற அவதியுறும் ஏழைமக்களிற்கும் கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.