மஞ்சு பார்கவியை மணந்தார் யோகிபாபு!!

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கலக்கல் ஸ்டார் யோகி பாபு. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நடித்துவிட்டவரின் கால்ஷீட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஃபுல் என்கிறார்கள்.


சில மாதங்களுக்கு முன் `பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ``வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குக் கூடப் போக முடியாதபடி நடிச்சிட்டிருக்கீங்களாமே, கல்யாணம் வந்தா தாலி கட்டவாவது போவீங்களா?" என விஜய் கூட இவரைக் கலாய்த்திருந்தார்.

யோகியின் திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவிய தகவல்களும் நிறைய. லேட்டஸ்ட்டாக சபீதா ராய் என்கிற நடிகையுடன் திருமணம் நடந்ததாகச் செய்திகள் பரவ, ``இன்னும் எத்தனை தடவப்பா எனக்குக் கல்யாணம் செய்து வைப்பீங்க?" என அதை யோகியும், கூடவே அந்த நடிகையும் மறுத்திருந்தது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், யோகிபாபுவுக்கு நிஜமாகவே இன்று (பிப்ரவரி 5, 2020) திருமணம் நடந்திருக்கிறது. செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு என்கிற கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் மிக எளிமையாக இத்திருமணம் நடந்தது. மணப்பெண் பெயர் மஞ்சு பார்கவி. யோகியின் பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம். பார்கவி கண் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கு சிகிச்சைக்குச் சென்ற யோகி பாபுவின் அம்மா அவரைச் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாகவே தற்போது யோகிபாபுவின் மனைவியாகிவிட்டார் பார்கவி.

இன்றைய அதிகாலை முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக நேற்று மாலையே நெருங்கிய ஐந்தாறு நண்பர்கள் மற்றும் மணப்பெண்ணுடன் செய்யாறு வந்து சேர்ந்த யோகி பாபு, அங்குள்ள செட்டி நாடு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். விடியற்காலை 4.30 மணிக்கு அனைவரும் கோயிலுக்கு வந்தனர். அங்கு மாலையும் கழுத்துமாக மணமக்கள் தயாராக, உடன் வந்த நண்பர்கள் சுற்றி நின்று வாழ்த்த, பார்கவியின் கழுத்தில் தாலி கட்டினார் பாபு.

சினிமா நட்சத்திரங்கள் எவரும் அழைக்கப்படாமல், படுரகசியமாக நடந்த யோகிபாபுவின் இந்தத் திருமணம் குறித்து கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சு கிளம்பியுள்ளது.

முருகபக்தரான யோகியின் திருமணம் முன்னதாக திருத்தணியில் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதுகுறித்து விகடன் இணையதளத்தில் எக்ஸ்க்ளூசிவாகச் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து மீடியாக்களின் பார்வையில் படக்கூடாது என்பதற்காகவே, திருத்தணியில் திருமணத்துக்காகச் செய்திருந்த ஏற்பாடுகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு, கடைசி நேரத்தில் இடத்தை செய்யாறுக்கு மாற்றினார் யோகி பாபு. உடன் சென்ற நண்பர்களுக்குமே திருமணம் நடைபெறும் கோயில் குறித்த தகவல் இன்று காலையில்தான் தெரிந்திருக்கிறது.

`இவ்வளவு ரகசியமாக ஏன்?" யோகி பாபுவின் நட்பு வட்டாரத்தில் சிலர் கூறியவை....

``எங்களுக்குமே உண்மையான காரணம் தெரியல. பொதுவா கல்யாணம் குறித்துப் பேசிட்டிருந்தப்பெல்லாம் ரஜினி சார், விஜய் சார், அஜித் சார்னு அத்தனை பேரும் நம்ம கல்யாணத்துல இருக்கணும். அந்த மாதிரி ஒரு தேதியை முடிவு பண்ணிட்டுத்தான் கல்யாணம் பண்ணணும்னுதான் சொல்லிட்டிருந்தார்.

நாலு நாளைக்கு முன்னாடி திருநெல்வேலியில இருந்து ஷூட்டிங் முடிச்சுட்டு வந்தவர், காதும் காதும் வச்ச மாதிரி சிலரைக் கூப்பிட்டு திருமணத் தகவலைச் சொல்லி, ரெடியா இருங்க போகணும்னு சொல்லியிருக்கார். கல்யாணத்துல கலந்துக்கிட்டவங்க எண்ணிக்கை பார்த்தீங்கன்னா, மொத்தத்துல பத்து பேர் கூட இருக்க மாட்டாங்க. காமெடியில் இப்போ நம்பர் 1 நடிகர் அவர். வசதிக்கெல்லாம் இப்ப குறையில்லை. எல்லாரையும் அழைச்சு மீடியாவுக்குத் தெரிவிச்சு ஊருக்கே சோறு போட்டு சந்தோஷமா நடத்தலாம். ஏன் இப்படி நடத்தினார்ங்கிறது ரகசியமாவே இருக்கு. செய்யாறுலகூட தங்கியிருந்த ஹோட்டல்ல இருந்து ராத்திரி 11 மணிக்கே எல்லாரும் கிளம்பி பக்கத்துல ஏதோவொரு கிராமத்துல ஒரு வீட்டுல போய் தங்கியிருக்காங்க. அதேபோல மணப்பெண் வீட்டுல இருந்து பெண்ணின் அப்பா அம்மா உட்பட ஒருத்தர்கூட கலந்துக்கலைன்னும் தெரியுது. எல்லா கேள்விகளுக்குமான பதில் யோகி பாபு கிட்ட மட்டும்தான் இருக்கு" என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.