ஜப்பானில் கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா வைரஸ்!!

ஜப்பானியத் துறைமுகமான யோகோகாமாவில் தரித்து நிற்கும் பயணிகள் கப்பலில் உள்ளவர்களில் குறைந்தது 10 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


டயமன்ட் பிரின்செஸ் (Diamond Princess) என்ற அந்தக் கப்பலில் உள்ள 3,700 பேரில் கிட்டத்தட்ட 300 பேர் இதுவரையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்படுகின்றது.

கடந்த மாதம் குறித்த கப்பலுக்கு வந்த ஹொங் கொங் நாட்டைச் சேர்ந்த 80 வயதான நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அடுத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் ஹொங் கொங்கிற்கு வந்த மற்றுமொரு கப்பலில் உள்ள 3,600 பயணிகளும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் சுகாதார அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் சுமார் 18 மில்லியன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வைரஸின் மைய நகரமான வுஹானில், விளையாட்டு அரங்கங்கள் உட்பட 11 பெரிய பொது இடங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு நோயுற்றவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்புத் தொடங்கியதில் இருந்து ஏற்கனவே இரண்டு புதிய மருத்துவமனைகள் அங்கு கட்டப்பட்டுள்ளன.

அரசாங்கம் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள் சாதகமான விளைவை அடைகின்றன என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனா நம்பிக்கையுடனும், வைரஸுக்கு எதிரான போரை வெல்லும் திறனுடனும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, உலக சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. எனினும் நோயின் தாக்கம் உலகளாவிய பரவலை உருவாக்கவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இருப்பினும், சீனாவில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 4,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் அங்கு 24,300க்கும் அதிகமானவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதுடன் 490 பேர் உயிரிழந்துள்ளனர்.

நன்றி bbc.co.uk

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.