ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!!

கடந்தகாலம் மற்றும் பிரச்சினைகளை நோக்கி விரல் நீட்டிக் கொண்டிருப்பதைவிடுத்து வீழ்ச்சியுற்றிருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நாட்டை கட்டியெழுப்பும் சவாலை தான் பொறுப்பேற்றது பொருளாதாரம் விழ்ச்சியுற்றுள்ளதென்ற தெளிவுடனேயே ஆகுமென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் பெருந்தோட்ட மற்றும் நிதி நிறுவன தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனம் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல, அது பல்வேறு நிபுணர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுடன் பல வருடங்களாக ஆய்வு செய்து மக்கள் பணிக்காக தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். பல நிறுவனங்கள் நீண்டகாலமாக வெறுமனே தொழில் வழங்கும் இடங்களாக மாறியுள்ளன.

இவ்வாறு நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது புதிய தலைவர்களினதும் பணிப்பாளர் சபையினதும் பொறுப்பாகும். நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு பதிலாக புதிய வழியொன்றின் ஊடாக வீழ்ச்சியடைந்துள்ள நிறுவனங்களை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தென்னை மற்றும் தேயிலை பயிர்ச் செய்கை அபிவிருத்தியுடன் ஏனைய பயிர்ச் செய்கைகளையும் முன்னேற்ற வேண்டும். புதிய ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி விவசாயத்துறையை முன்னேற்ற வேண்டும்.

பாரம்பரிய கைத்தொழில்களுக்கு முன்னுரிமையளித்து பாரிய வருமானத்தை ஈட்ட முடியும். இந்த அனைத்து துறைகளினூடாகவும் பெருமளவு தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சில நாட்களாக பட்டதாரிகள் உள்ளிட்ட குழுக்கள் தொழில் கேட்டு ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு வந்தனர். நாட்டில் சுற்றுலா, கணனி தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகளவு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனினும் கல்வி முறைமையிலுள்ள குறைபாடுகளின் காரணமாக இந்த வெற்றிட வாய்ப்புகள் பயன்படுத்தப்படாதிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சந்தைக்கு ஏற்ற வகையில் கல்வி முறைமையை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா உலக பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக மாறி வருகின்றது. இன்னும் நான்கு வருடங்களில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் எதிர்கால தலைமுறையை பயனுறுதிமிக்க வகையில் அவற்றில் ஈடுபடுத்தக்கூடிய வகையில் தேவையான சூழலை அமைத்துக் கொடுப்பது தனது முக்கியமான நோக்கமாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பான கருத்துப் பரிமாறலும் இந்த சந்திப்பின்போது இடம்பெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.