மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலை தானம் செய்த பெற்றோர்கள்!!
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே சாலைவிபத்தில் சிக்கிய 20 வயது இளைஞர் சுரேந்திரன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் மூளைச்சாவு அடைந்ததால் 3 நாளாகியும் அவர் நினைவு திரும்பாததையடுத்து அவருடைய இதயம், கண், நுரையீரல் என உடலில் முக்கிய உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. சுரேந்திரனின் இதயமும் கண்ணும் சென்னைக்கு சேலம் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விவரம் முன்கூட்டியே சேலம் போக்குவரத்துக் காவலர்களுக்குக் கொடுக்கப்பட்டு அலர்ட் செய்யப்பட்டது. அதையடுத்து ஒவ்வொரு சிக்னலுக்கும் காவலர்கள் நிற்க வைக்கப்பட்டு வாகனங்கள் வேறு வழியில் மாற்றி விடப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை முதல் விமான நிலையம் வரை சாலை கிளியர் செய்யப்பட்டது.
அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து சுரேந்திரனின் இதயம் மற்றும் கண் நவீன வசதியுடன்கூடிய ஆம்புலன்சில் 11.11 மணிக்கு வைக்கப்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் அதி வேகத்தில் சென்று விமான நிலையத்திற்கு 11.29-க்குச் சென்றது.
சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து 23 கி.மீட்டர் தொலைவில் உள்ள விமான நிலையத்தை 18 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சென்றடைந்தது. பிறகு, விமானம் மூலம் சென்னை குளோபல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனையில் வேதனையோடு நின்றுகொண்டிருந்த சுரேந்திரனின் அப்பாவிடம் பேசியபோது, ''என் பேரு ஜெயக்குமார், என் மனைவி பேரு ராணி. எங்களுக்கு ரவீந்திரன், சுரேந்திரன் என இரண்டு பசங்க. நாங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் நாரியப்பனூர் கிராமத்தில் வசிக்கிறோம். எனக்கும் இதய நோய் இருப்பதால் குடும்பம் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம்.
இந்த நிலையில் சின்ன பையன் சுரேந்திரன் கோழிப் பண்ணைக்கு வேலைக்குப் போயிட்டு வந்தார். சனிக்கிழமை பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரே வந்த பைக்கில் மோதி கீழே விழுந்து மூளைச் சாவு அடைந்துவிட்டான். அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். மூன்று நாள்கள் ஆகியும் நினைவு திரும்பவில்லை.
உறுதியாக இனி பிழைக்க மாட்டான். உடல் தானம் கொடுத்தால் மற்றவர்களுக்குப் பயன்படும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதையடுத்து நாங்க குடும்பமாக பையனை மண்ணில் புதைப்பதைவிட உறுப்புகளைத் தானம் கொடுத்தால் அவன் இன்னொருவருடைய உருவத்தில் வாழ்ந்துகொண்டிருப்பான் என்று முடிவெடுத்து உடல்தானம் செய்தோம்'' என்றார் கண்ணீர் ததும்ப...
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo