மன்னார் புதைகுழி விவகாரம் - சட்டமா அதிபர் திணைக்களத்தை எதிர்க்கும் சட்டத்தரணிகள்!

மன்னார் மனித புதைகுழி வழக்கில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆஜராகின்றமை தொடர்பில், காணாமற்போனோரின் குடும்பங்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.


மன்னார் மனித புதைகுழி வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தமது சமர்ப்பணத்தை முன்வைக்கவுள்ளதாக, மனுதாரர் தரப்பு சட்டத்தணி K.S. இரட்ணவேல் கூறியுள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் இதில் ஈடுபடுவது மிகவும் ஒரு அசாதாரணமான விஷயம். ஏனென்றால் ஒரு அரச கட்டமைப்பிற்குள் இருக்கும் ஒரு திணைக்களம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் தடை போடுவது ஒரு முறையற்றதாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் பிரசித்தி பெற்ற இந்த விசாரணையை திசைதிருப்பும் முகமாக இவர்கள் செயற்படுவது மிகவும் வருத்தத்தையும் ஆத்திரத்தையும் எங்களுக்கு அளிக்கின்றது.

எதிர்வரும் 25ஆம் திகதி பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நாங்கள் எங்களின் சமர்ப்பணத்தை செய்வோம். அதன் பின்னர் நீதிமன்றம் அவரின் ஆட்சேபனையை அனுமதிப்பதா இல்லையா என்ற விடயத்தை ஆராய்ந்து உத்தரவை அளிக்கும் என காணாமற்போனோரின் குடும்பங்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி K.S. இரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி வழக்கு கடந்த 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, காணாமற்போனோரின் குடும்பங்கள் சார்பில் தாம் ஆஜராகுவதற்கு அரசதரப்பு சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்ததாக சட்டத்தரணி K.S. இரட்ணவேல் குறிப்பிட்டுள்ளார்.

புளோரிடாவிற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட எச்சங்கள் 300 வருடங்கள் பழைமையானவை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இப்போது இருக்கமாட்டார்கள் என்பதன் அடிப்படையில் அரச தரப்பு சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

அரசதரப்பு சட்டத்தரணி தமது வாதத்தின்போது மிகவும் காரசாரமாகவும் நீதிமன்றங்களில் வழக்கமாக பிரயோகிக்கடுவதை விட தகாத வார்த்தைகளை பிரயோகித்ததாக சட்டத்தரணி K.S. இரட்ணவேல் கூறினார்.

இதனால் மன்னார் சட்டத்தரணிகள் மன்றிலிருந்து வௌிநடப்பு செய்ததுடன், அரசதரப்பு சட்டத்தணி மன்னிப்புக் கோரியதை அடுத்து அவர்கள் மீண்டும் வருகை தந்தனர்.

இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அறையின் ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மன்னார் பொலிஸாரால் மற்றுமொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்ற அறையின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​

இது தொடர்பில் பொலிஸாரும் நீதவானும் கடந்த 11ஆம் திகதி நேரடியாக சென்று அவதானித்ததாக மன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.