பசில் சார்பில் மத ரீதியில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள்!!

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக இரண்டு மத வாத சுயேச்சைக்குழுக்களில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.


இதனால் தமிழர்களின் வாக்குகள் ‘கத்தோலிக்கம்’, ‘இந்து’ என்ற மத அடிப்படையில் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து ஒரு சுயேச்சைக்குழு அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதேச செயலாளர் ஒருவரின் தலைமையில், நகர சபை உறுப்பினர், கத்தோலிக்க ஒன்றிய பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள் என சிலர் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோல, தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் அங்கத்துவ கட்சியில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர் ஒருவருக்கு ஆசனம் வழங்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

எனினும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கத்தோழிக்கர்களாக இருக்கின்ற போதும் 3 வது வேட்பாளராக ஒரு கத்தோலிக்கருக்கு ஆசனம் வழங்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

எனினும் கூட்டமைப்பு குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் முன்னாள் பிரதேச செயலாளர் ஒருவரின் தலைமையில் நகர சபை உறுப்பினர், கத்தோலிக்க ஒன்றிய பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள் என சிலர் இணைந்து மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களையும் உள்ளடக்கி கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள சுயேச்சைக்குழு ஒன்றை தயார்படுத்தி வருகின்றனர்.

சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகத்தை முன்னிலைப்படுத்தி இந்த கூட்டமைப்பை களமிறக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இந்து பிரதிநிதித்துவம் ஒன்று தேவை என்பதனை கருத்தில் கொண்டு இந்து மக்களின் வாக்குகளை வைத்து எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேச்சை குழு ஒன்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை இன்றைய தினம் அறிவித்துள்ளது.

எதிர்வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் இந்து மக்களின் பிரதி நிதித்துவத்திற்காக ஆசனம் ஒன்றை கோரிய போதும் அதற்கு இணக்கம் தெரிவிக்கப்படாத நிலையிலே சுயேச்சைக்குழு ஒன்றில் இந்துக்கள் சார்பாகவும், இந்து மக்களின் வாக்கினை அடிப்படையாக கொண்டும் போட்டியிடவுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்ற போதும் கத்தோலிக்க மற்றும் இந்து மக்கள் தனித்தனியாக மத ரீதியில் வாக்களிப்பார்கள் என்றால் மன்னாரின் நிலை கவலைக்கிடமாகவே போய்விடும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

விட்டுக்கொடுப்பு இல்லாமல் செயற்படும் ஒரு சில தலைமைத்துவத்தினால் மன்னாரில் தமிழ் மக்களிடம் மேலும் மேலும் பிரிவினை ஏற்படுகின்றது.

மதத் தலைவர்கள் மதத்தை மட்டும் போதிக்க வேண்டும். அரசியல் வாதிகள், தமிழ் மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அரசியல் தொடர்பில் உரிய காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்-என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இரு சுயேச்சைக்குழுவையும் வழிநடத்துகின்றவர்களை அன்மையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச சந்தித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.