கொரோனா - குணமடைந்த பெண் சீனாவுக்குப் பயணம்!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், அங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சீனப் பெண், தனது தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்லவுள்ளார்.
குறித்த பெண் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) முற்பகல் வைத்தியசாலையில் இருந்து மலர்ச்செண்டு வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டார்.
மன நெகிழ்வுக்குரிய இந்த தருணத்தில் இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மருத்துவமனையின் வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
சீனாவின் ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த 43 வயதான இந்தப் பெண் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த மாதம் 26ஆம் திகதி கொரோனா வைரஸ் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவர் மீது பரிசோதனை மேற்கொண்ட இலங்கை வைத்திய நிபுணர்கள், அப்பெண்ணுக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்திருந்தனர்.
சீனப் பெண்ணின் உடலிலிருந்து வைரஸ் முற்றாக நீங்கியுள்ளதா என்பது தொடர்பாக அறிவதற்காக போதியளவிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தொற்று நோயியல் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அந்த சீனப் பெண்ணின் உடலில் இல்லை என பரிசோதனைகளின் முடிவில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, தற்போது அப்பெண் பூரண குணமடைந்துள்ள நிலையில், சுகாதார அமைச்சு அவர் வீடு திரும்புவதற்கான அனுமதியை வழங்கியது.
வைத்தியசாலையில் இருந்து சுகமடைந்து பிரியாவிடை வழங்கி வழியனுப்பப்பட்டுள்ள அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo