கமல்ஹாசனின் மொத்த சொத்து!

மக்கள் நீதி மய்யம் 3 ஆவது ஆண்டில் காலடிஎடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் துவக்கினார். கட்சியைத் தொடங்கி பிறகு மக்களை சந்திக்க சுற்றுப் பயணம், கிராம சபைக் கூட்டம், கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

மக்களவைத் தேர்தலை சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து டார்ச் லைட் சின்னத்தில் சந்தித்த மக்கள் நீதி மய்யம் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது. ஆனால், நகர்ப்புற பகுதிகளில் பெற்ற அளவுக்கான வாக்குகள், கிராமப் புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைக்கவில்லை.

மேலும், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற வேலூர் தேர்தல் மற்றும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் மக்கள் நீதி மய்யம் புறக்கணித்து, சட்டமன்றத் தேர்தல்தான் தங்களது இலக்கு என்று தயாரானது. கிராமியமே தேசியம் என்ற முழக்கத்தோடு களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் கிராமப் புற பகுதிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுக்காதது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் இன்றுடன் (பிப்ரவரி 21) மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்து காரணமாக 3ஆவது ஆண்டு தொடக்க நிகழ்வுகளில் கமல்ஹாசன் பங்கெடுக்கமாட்டார் என மக்கள் நீதி மய்யம் அறிவித்தது.

இந்த சூழலில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்தப் பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியைச் சொல்லில் இன்றி, தமிழகத்தைப் புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்” என்று பதிவிட்டுள்ளார்.

த.எழிலரசன்


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.