டிஸ்னிலான்ட் செல்லும் கேலி கிண்டலுக்கு ஆளான சிறுவன்!!
"ஒரு கை உன்னை அடிக்க ஓங்கினால், ஆயிரம் கைகள் உன்னை அரவணைக்கக் காத்திருக்கும்."
இந்தக் கூற்று உண்மை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் எலும்பு வளர்ச்சி குறைவு (Achondroplasia) நோயால் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள ஒன்பது வயது சிறுவன் குவாடன் பேல்ஸ் (Quaden Bayles) வாழ்க்கையில் இது நிறைவேறியுள்ளது.
ஒன்பது வயதுடைய குவாடன் பேல்ஸ் (Quaden Bayles) என்னும் சிறுவன், எலும்பு வளர்ச்சி குறைவு (Achondroplasia) நோயால் பாதிக்கப்பட்டு, குள்ளமாகவும், தலை பெரிதாகவும் காணப்பட்டான். இதனால் தான் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டான். பல முறை மனமுடைந்து, தற்கொலை செய்யக்கூட துணிந்திருக்கிறான்.
இதைப் பார்த்து வருத்தமுற்ற அவரது தாயார் யர்ராகா பேல்ஸ் (Yarraka Bayles), அவனை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பினார். சமீபத்தில், அவனை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல வந்த தாயாரிடம் மனமுடைந்து,
"யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள்!"
"எனக்கு ஒரு கயிறு கொடுங்கள், நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்"
என்று குமுறியிருக்கிறான். இதுநாள் வரை பொறுத்திருந்த தாயார், அவனது குமுறலை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் கண்டனத்தோடு பதிவிட்டார். பள்ளியில் நிலவும் சகிப்புத்தன்மையற்ற மனோபாவத்தைக் கடுமையாகச் சாடி, தன் மகனின் பரிதாப நிலையைக் கூறினார். இந்த வீடியோ மிகவும் வைரலாகப் பரவி, உலகமெங்கும் கவனம் ஈர்த்தது. பலர் அதற்குக் கண்டங்களும், அந்த சிறுவனுக்கு ஆதரவாக நல்வார்த்தைகளையும் பதிவிட்டனர்.
'மனிதம்' கொடுத்த ஆச்சர்யப் பரிசு:
வைரலாகப் பரவிய வீடியோ, பொதுச் சமூக மக்கள் மட்டுமன்றி, பல பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் பிராட் வில்லியம்ஸ் ( Brad Williams ), இந்தச் சிறுவனுக்காக நிதி திரட்டி, குவாடனையும் அவரது தாயாரையும் டிஸ்னிலேண்டுக்கு (Disney land) அழைத்துச் செல்ல வழிவகை செய்துள்ளார். இதுவரை 6,500 பேர் சேர்ந்து, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் நிதியாகக் கொடுத்துள்ளனர்.
இதைக் குறிப்பிட்ட பிராட்,``இது குவாடனுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் கேலி, கிண்டல் வதைக்கு உள்ளாகுபவர்களுக்கு ஒரு வெற்றியாகும். இந்த உலகத்தில் மனிதம் என்று ஒன்று உள்ளது. அதைப் பெற அனைவரும் தகுதியானவர்கள் என்று உரக்கக் கூறுவோம்" என்றார். இவரும் உயரம் குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், எக்ஸ்-மென் திரைப்படங்கள் புகழ், ஹுக் ஜேக்மேனும் (Hugh Jackman) குவாடனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
"நீ நினைப்பதைவிட பலசாலியானவன். நானும் உன் நண்பன்தான். என்னுடைய ரசிகர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யப் பழகுங்கள்" என வீடியோ ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். அதேபோல, நடிகர் ஜெஃபிரி டீன் மோர்கன் (Jeffrey Dean Morgan), அந்தச் சிறுவனுக்கு ஆதரவாக வீடியோ பதிவு வெளியிட்டு, மக்களையும் குவாடனையும் ஆச்சர்யப்படுத்தினர்.
NRL (Rugby) வீரர்கள், அவர்களுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டதுடன், குவாடனை அவர்களோடு மைதானத்தில் அழைத்து கௌரவிக்க ஆசைப்பட்டனர். சமீபத்தில், மனிதம்தான் என்றும் உயர்ந்தது என்று மக்களிடம் எடுத்துக்காட்டிய நிகழ்வுகளில் இதுவும் முக்கியமான ஒன்று.