`ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’

மருத்துவமனையில் பிறந்து சில நொடிகளே ஆன குழந்தை மருத்துவர்களை முறைப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மீம் கிரியேட்டர்களும் இந்தப் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஏராளமான மீம்ஸ்களைப் பகிர்ந்துவந்தனர். இந்த நிலையில், குழந்தையின் புகைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிரேஸிலின் பிரபல நகரமான ரியோ டி ஜெனிரோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், டையானே தி ஜீசஸ் பார்போஸா என்பவருக்கு, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பிறந்த குழந்தைதான் இந்தப் புகைப்படத்தில் உள்ள இசபெல்லா பெரேரா தி ஜீசஸ். குழந்தைகள் பிறந்த உடனே அழும். ஆனால், இசபெல்லா பிறந்தபோது அழவில்லை. மருத்துவர்கள் சில முயற்சிகள் செய்தும், அழாமல் மருத்துவர்களைப் பார்த்த வண்ணம் இருந்துள்ளாள். இதைப் புகைப்படங்களாக ரோட்ரிகா என்பவர் பதிவுசெய்துள்ளார்.

இசபெல்லா பிறக்கும் அழகிய தருணங்களைப் பதிவுசெய்ய, குழந்தையின் அம்மா உள்ளூர் புகைப்படக் கலைஞரான ரோட்ரிகாவை ஏற்பாடுசெய்துள்ளார். குழந்தையின் இலகுவான பாவனைகளைப் புகைப்படம் எடுப்பதற்காக அவர் காத்துக்கொண்டிருந்தார். அந்த தருணத்தைப் பற்றி அவர் பேசும்போது, ``மருத்துவர்கள், தொப்புள்கொடியை வெட்டுவதற்கு முன்பு குழந்தையை அழவைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவள், கண்களை அகலமாகத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அழவில்லை. அழு இசா! என மருத்துவர்கள் கூறியவுடன், கொஞ்சம் சீரியஸாக முகத்தை மாற்றினாள். தொப்புள்கொடியை வெட்டிய பின்னரே அழ ஆரம்பித்தாள்” என்றார்.

``குழந்தை பிறக்கும் தருணங்கள் தனித்துவமானது. அந்தத் தருணங்கள் பதிவுசெய்வதற்குத் தகுதியானது” என்று ரோட்ரிகா கூறியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில், அந்தக் குழந்தையின் முதல் அழுகை விலைமதிப்பற்ற சில தருணங்கள் வரை தான் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதன்பின்னர், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது. புகைப்படங்களாக மட்டுமின்றி அந்த தருணத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

இசபெல்லாவின் அம்மா இதுதொடர்பாகப் பேசுகையில், ``என்னுடைய குழந்தை தைரியமான மனத்துடன் பிறந்துள்ளது. இசபெல்லா 20-ம் தேதிதான் பிறக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தினர். ஆனால், அவளுக்கான நாளை அவளே தேர்ந்தெடுத்து, தனது ஆளுமையையும் வெளிப்படுத்தியுள்ளாள். டயப்பர்களை மாற்றும்போதும் மருந்துகள் கொடுக்கும்போதும், இப்போது தன்னுடைய நெற்றியைச் சுருக்கிப் பார்க்கிறாள்” என்று நெகிழ்ந்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பேசியுள்ளார்.

பிறந்து சில நாள்களிலேயே பலரின் இதயங்களைக் கவர்ந்த இசபெல்லாவுக்கு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.