தாஜ்மஹாலில் டிரம்ப் தம்பதியினர்!!


இந்தியாவிற்கு முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உத்தரபிரதேசத்துக்கு சென்று, உலக பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலை பார்வையிட்டார் 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் முதற்பெண்மணி மெலனியா ஆகியோர் நேற்று (திங்கட்கிழமை) மாலை, தாஜ்மஹாலுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த ஒப்பற்ற பளிங்கு மாளிகையை அவர்கள் அங்குலம், அங்குலமாக ரசித்தனர். தாஜ்மஹாலின் மேன்மையையும், முகலாய கட்டிடக்கலையையும் சுற்றுலா வழிகாட்டிகள் அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

புகழ்பெற்ற தாஜ்மஹாலை ஒவ்வொரு கோணத்திலும் ரசித்த டிரம்ப் தம்பதியினர், பல இடங்களில் நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். மறுபுறம் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் தம்பதியும் தாஜ்மஹாலின் அழகை ரசித்தவாறே புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

தாஜ்மஹாலை பார்த்து வியந்த டிரம்ப் அங்கே வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில், தாஜ்மஹாலை புகழ்ந்து எழுதினார். அதன்படி, ‘தாஜ்மஹால் எங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் வளமான மற்றும் மாறுபட்ட கலாசாரத்தின் ஒரு வாழும் உதாரணம் இதுவாகும்’ எனறு குறிப்பிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் தாஜ்மஹாலில் செலவிட்ட டிரம்ப் மற்றும் குடும்பத்தினர் பின்னர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
Blogger இயக்குவது.