டெல்லியில் தொடரும் பதற்றம்!

சிஏஏவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடந்த போராட்டம்
வன்முறையாக மாறியது. இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக டெல்லியில் வன்முறை வெடித்து வருகிறது. கல்வீச்சு தாக்குதல், வீடுகள் அலுவலகங்களுக்கு தீ வைத்தல், குறிப்பாக முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வீடுகளை தாக்குதல், துப்பாக்கிச் சூடு என கடந்த இரு தினங்களாக டெல்லி வன்முறை களமாக மாறியுள்ளது. தீ வைப்பு சம்பவங்களால் டெல்லி புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது.

இந்த வன்முறையால் படுகாயமடைந்து 7 பேர் வரை பலியான நிலையில், பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்திருப்பதாக ஜிடிபி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 சதவிகிதத்தினர் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்துள்ளனர் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.



இதனிடையே இந்த வன்முறை குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை, உயரதிகாரிகளின் உத்தரவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதன் பின் ஆளுநர் அனில் பைஜால், கெஜ்ரிவால் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஆயுதம் ஏந்திய 1000 போலீசாரை வன்முறை நடக்கும் பகுதிகளுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ்-எம்.எல்.ஏ ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில், டெல்லி-உ.பி.-ஹரியானா எல்லைப் பகுதிகளிலிருந்து சமூக விரோத சக்திகள் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி போலீசார் எல்லையில் சோதனை முறையை நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் டெல்லியில் இன்று மூன்றாவது முறையாக வன்முறை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாவட்டம் பஜன்புராவில் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் மற்றும் கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இதில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். என்,டி.டி.வி செய்தியாளர்கள் அரவிந்த் குணசேகர் மற்றும் சவுராப் சுக்லா இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வன்முறை தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் டிவிட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கவிபிரியா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.