தீவகத்தில் அங்கஜனுக்கு எதிராக போராட்டம்!

தீவகப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.


இதனால், வேலணை பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வேலணை பிரதேச செயலகத்தில் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற அங்கஜன் இராமநாதனை பிரதேச செயலகத்தின் நுழைவாயிலில் வழிமறித்து பிரதேச சபை உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நீண்ட நேரத்தின் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. எனினும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.