புத்தூரில் தொடர்கிறது பதற்ற நிலை!!!


புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.


எனினும் அந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மயானத்தைச் சூழவுள்ள மக்கள் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் எதிர் மனுதாரர்களாக கிந்துப்பிட்டி மயான நிர்வாகம், அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

அந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த சீராய்வு மனு மீதான விசாரணை சுமார் இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. மனு மீதான இறுதிக் கட்டளை கடந்த நவம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கிய கட்டளையை இரத்துச் செய்து கட்டளையிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி கோரும் தரப்பு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரத்தை கடந்த நவம்பர் மாதம் முன்வைத்தனர்.

இதன்போது, ‘மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எரியூட்ட முடியும். அதனை எதிர்த் தரப்பு தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்தத் தரப்புக்கு எதிராக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம்  எரியூட்டுவதற்கு தயாராவதற்கு உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில் அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை உள்ளதாக தெரியவருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.