ட்ரம்ப் கேட்ட கேள்வியால் தமிழக அரசுக்கு நெருக்கடி!

வண்ணாரப்பேட்டை குறித்து அமெரிக்க அதிபரே நேரடியாக மோடியிடம் விசாரித்துள்ளதால், வண்ணாரப்பேட்டை போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டுவரும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடும் அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.


தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கிலும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோது, இதுகுறித்த ரிப்போர்ட் அவருக்கு அளிக்கப்பட்டதாகவும் குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டம் குறித்து ட்ரம்ப் விசாரித்து அறிந்ததாகவும் இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியின் ஷகீன் பாக் பகுதியில் 75 நாள்களாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னையின் வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி, தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு எழுத்துபூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும், போராடியவர்கள் மீது தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பெண்களும் மாணவர்களும் அதிகளவில் பங்கேற்பது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற `வெல்கம் ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் டெல்லியில் கால் பதிப்பதற்கு முன்னதாகவே, சி.ஏ.ஏ. ஆதரவு, எதிர்ப்பாளர்கள் இடையே கலவரம் வெடித்தது. உடனடியாக, இந்தியாவில் நடைபெறும் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம் குறித்தும் அதில் பங்கேற்பவர்கள் குறித்தும் விரிவான அறிக்கையை அமெரிக்கத் தூதரகம் தயாரித்து அதிபர் ட்ரம்ப்பிடம் அளித்துள்ளது. இதனடிப்படையில், பிரதமர் மோடியிடம் தனிப்பட்ட ரீதியாக ட்ரம்ப் விசாரித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழரான இந்திய வெளியுறவு அதிகாரி ஒருவர், "செப்டம்பர் 2012-ல், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை அமெரிக்க அரசு தடை செய்யாததைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில், சென்னை ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது. பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் பூத்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக சுமார் 100 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது சி.ஏ.ஏ-வுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றுள்ளதால், அமெரிக்க அதிபர் கவலையடைந்துள்ளார்.

டெல்லியின் ஷகீன் பாக், மேற்கு வங்கம், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, புனே, லக்னோ ஆகிய இடங்களில் நடைபெறும் போராட்டம் குறித்து ட்ரம்ப்பிடம் அமெரிக்க அதிகாரிகள் விளக்கியுள்ளனர். தமிழகத்திலும் கேரளாவிலும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதையும் கூறியுள்ளனர். 2012-ல் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்த அதிபர் ட்ரம்ப், சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து விசாரித்துள்ளார்.


போராட்டம் நடைபெறும் இடமும் அமெரிக்க துணைத் தூதரகம் இருக்கும் இடமும் வெவ்வேறு இடங்களில் உள்ளதாக கூறிய அமெரிக்க அதிகாரிகள், மக்கள் அமைதியான முறையிலேயே போராடி வருவதாகக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, சி.ஏ.ஏ போராட்டம் குறித்து அதிபர் ட்ரம்ப்பிடம் இந்தியா சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள அமெரிக்க பிரஜைகள், சொத்துகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்தார். இதனடிப்படையில்தான் `இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை' என அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார். எனினும், இந்தியாவில் நடைபெறும் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை அமெரிக்காவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.

சென்னை உட்பட இந்தியாவில் நடைபெறும் முழு போராட்ட இடங்களையும் குறிப்பிட்டு, அமெரிக்க பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை அளித்துவிடலாம் என அமெரிக்க அதிகாரிகள் முதலில் ஆலோசனை அளித்தார்களாம். ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதை நிராகரித்துவிட்டார். `சுற்றுப் பயணம் முடிந்து கிளம்பும்போது, இப்படி ஓர் எச்சரிக்கை அளித்தால் சரியாக இருக்காது. டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை மட்டும் மையப்படுத்தி எச்சரிக்கை வெளியிடுங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில்தான், அதிபர் ட்ரம்ப் கிளம்பிச் சென்ற பின்பு டெல்லியில் நடைபெறும் போராட்டம் காரணமாக அமெரிக்க பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிக்கை வெளிவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் வருகையின்போது சி.ஏ.ஏ போராட்டம் கலவரமாக வெடித்ததால், மோடி கடும் பதற்றமடைந்துள்ளார். உடனடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கலவரம் பாதித்த பகுதிகளுக்கே நேரில் அனுப்பிய மோடி, டெல்லியில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பையும் அவரிடம் அளித்துள்ளார். டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில், சட்டம் ஒழுங்கு சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட எஸ்.என்.ஶ்ரீவத்ஸவாவிடம், டெல்லி போலீஸ் கமிஷனர் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை குறித்து அமெரிக்க அதிபரே நேரடியாக மோடியிடம் விசாரித்துள்ளதால், வண்ணாரப்பேட்டை போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடும் அழுத்தம் கொடுக்கிறதாம். இதன் வெளிப்பாடுதான், சமீபத்தில் முதல்வர் நடத்திய சமரச பேச்சுவார்த்தை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். வண்ணாரப்பேட்டை போராட்டத்தை தொடரப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசு என்ன மூவ் எடுக்கப் போகிறது???
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.