இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!


இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் மீட்க கோரி, ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 27ம் தேதி மீன் பிடிக்க சென்ற 11 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீனவரின் படகும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களையும் படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே விசைப்படகு மீனவர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை உடன் விடுவிக்க வேண்டும். பறிமுதல் செய்த விசைப்படகை விடுவிக்க வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டும் நல்ல நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Blogger இயக்குவது.