சிஐடி மட்டு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகிறது?

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரையும் அவரது குடும்பத்தினரையும் சிஐடி என அடையாளப்படுத்தும் சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.



கடந்த 2018ம் ஆண்டில் இருந்து தங்களது ஊடக சங்கத்தை இலக்கு வைத்தும் சங்கத்தில் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபடும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து பொலிஸ் விசாரணை, சிஐடி, ரிஐடி, விசாரணைகள், மற்றும் நீதிமன்ற வழக்குகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தன.

குறிப்பாக ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் மீது தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிர்வகிக்கப்படும் மட்டு ஊடக அமையத்திற்குள் ஏழு தமிழ் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தை திசைதிருப்பி அதனை கவனத்தில் எடுக்காத பாதுகாப்பு தரப்பு தற்போது சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களை பல்வேறு வகையில் அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனின் வீட்டிற்கு சிஐடி என தங்களை அடையாளப்படுத்தும் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்று அவரை விசாரணை செய்ய வேண்டும் என கூறி தேடிச் சென்றுள்ளனர்.

இதனால் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.