யாழில் வலம்புரிப் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் முயற்சி!

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான வலம்புரிப் பத்திரிகை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குழு ஒன்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளது.


நேற்று (20) வியாழக்கிழமை எழுவைதீவிலிருந்து வந்த சுமார் 30 பேர் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு குறித்த பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலம்புரிப் பத்திரிகையில் வெளிவந்த "ஆலடிமாநாடு" என்ற கட்டுரையில் எழுவைதீவு முருகமூர்த்தி வித்தியாலய மாணவர்களை எழுவைதீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்கு மாற்றுகின்ற முயற்சியில் தீவகத்தில் உள்ள கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகக் கூறி வலம்புரி பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த மேற்படி கத்தோலிக்க மதம் சார்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழு, வலம்புரி பத்திரிகை அலுவலகத்தையும் உத்தியோகத்தர்களையும் சாடும் நோக்குடன் உள்நுழைந்ததுடன், கத்தோலிக்க மதத்திற்கு எதிராக வலம்புரிப் பத்திரிகை நடந்து கொள்வதாகவும் கத்திக் குளறி கலகம் செய்தனர்.

கூடவே குறித்த கட்டுரையை எழுதியவரை தமக்கு இனம் காட்ட வேண்டும் என்றும் அவரைத் தாக்கப் போவதாகவும் அட்டகாசம் செய்துள்ளனர். மன்னார் திருக்கேதீச்சர நுழைவாயில் வளைவை தள்ளி வீழ்த்தி நந்திக் கொடியை காலால் உழக்கிய அதே பாணியில் பிரஸ்தாபக் குழு வலம்புரி அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளது.

பிரஸ்தாப குழுவின் அடாவடித்தனம் எல்லை மீறிய நிலையில் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட குழுவினரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தை அறிந்த வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளரும் பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதேவேளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கையில் குறித்த குழுவில் வந்திருந்த பெண்கள் ஒரு பாதிரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தங்களை இங்கு அனுப்பி வைத்ததாகவும் குறித்த கட்டுரையில் வந்த செய்தி மற்றும் ஊர்காவற்றுறையில் சைவப் பெயர்கள் உள்ள வீதிகளுக்கு கத்தோலிக்கப் பெயர்களைச் சூட்டுகின்ற செய்தியை வலம்புரிப் பத்திரிகை பிரசுரித்தமையாலும் தாங்கள் இங்கு அனுப்பப்பட்டதாகவும் மற்றும்படி குறித்த கட்டுரையில் வந்த தகவல்கள் என்ன என்பதே தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுவைதீவிலிருந்து ஊர்காவற்றுறைக்கு வந்த பிரஸ்தாபக் குழு அங்கிருந்து NA-1810 என்ற இலக்கத் தனியார் பேருந்தில் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்திருந்தது.

அத்துடன் கத்தோலிக்கத்துக்கு எதிராக எழுதினால் வலம்புரிப் பத்திரிகையைத் தாக்குவோம் என்றும் இவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை தீவகத்தில் உள்ள பாதிரியார் ஒருவர் சைவ சமயத்திற்கு எதிராகச் செயற்பட்டு சமய நல்லிணக்கத்துக்கு குந்தகம் செய்வது பற்றியும் அடாவடிக் குழுக்களை இயக்கி ஊடகத்துக்கு அச்சுறுத்தல் விடுகின்ற அவரின் பயங்கரவாதப் போக்கை விளக்கி வத்திக்கானில் உள்ள திருச்சபைக்கு தெரியப்படுத்த குறித்த பத்திரிகை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ்.மறைமாவட்ட ஆயரின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாக வலம்புரிப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.