சந்தையில் ரகசிய வாழ்க்கை’ - சீன அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த குடும்பம்!!

சீனாவில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் இந்த வைரஸால் மக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். பல நாடுகளும் மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கூறப்படும் வுகான் உட்பட பல்வேறு மாகாணங்கள் கடந்த சில மாதங்களாக முடக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கு மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வுகான் சந்தை ஒன்றில் குடும்பம் ஒன்று ரகசியமாக வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டறிந்து மீட்டுள்ளனர்.


வுகான் நகரின் சந்தைப் பகுதியில் பணியாளர்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வர்த்தகப் பகுதியாக விளங்கும் அந்தச் சந்தையில் உள்ள கடைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தைச் சுத்தப்படுத்தியும் அங்கிருக்கும் பொருள்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தியும் வருகின்றனர். இதற்கு முன்னதாக, நகரத்திலுள்ள விலங்குகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்றுவரும் இந்தப் பணியின்போதுதான் ஒரு குடும்பத்தினரை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் உடனடியாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் வயதான நபர் உள்ளிட்ட நான்கு பேரையும் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர். `நீங்கள் ஏன் சந்தையில் தங்கியிருந்தீர்கள்?’ என்ற கேள்விக்கு குடும்பத்தினர் பதிலளிக்க மறுத்துள்ளனர். அவர்கள் சந்தையில் பணியாற்றி வந்துள்ளதாக அவர்களை மீட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் யாருக்கும் நோய்த்தொற்று இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`
கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை சுமார் 94,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,200-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். வுகான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி கொரோனா வைரஸால் பாதிப்படைந்த முதல் வழக்கு பதிவானது. தொடக்கத்தில் வந்த நோயாளிகள் பலரும் இந்த சந்தைப் பகுதிகளைச் சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். பின்னர், வேகமாகப் பரவிய இந்த வைரஸைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வுகான் நகரம் முடக்கப்பட்டது. சந்தைப் பகுதியில் இருந்த விலங்குகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாகவும் கூறப்பட்டது.


ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் டேனியல் லூசி வைரஸ் தொடர்பாக பேசும்போது, ``வுகானில் வசிப்பவர்களிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கொரோனா வைரஸ் அமைதியாகப் பரவத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், வுகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் வெளியானதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அந்நிறுவனத்தில் தலைவர் ஷி ஜெங்லி மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``வைரஸ் பரவியதற்கும் ஆய்வகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். இத்தகைய குற்றச்சாட்டுகளை எழுப்புபவர்கள் அறிவியலை நம்பவில்லை. நாட்டிலுள்ள வல்லுநர்கள் இதுதொடர்பாக விசாரித்து நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பார்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Credits : Daily Mail

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.