`உலகின் மிகச்சிறந்த அம்மா!’ - பெண்கள் தினத்தில் கௌரவிக்கப்படும் தந்தை!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி என்பவர் 2016-ம் ஆண்டு டவுன் சின்ரோம் குறைபாடுள்ள குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சர்வதேச மகளிர் தினத்தைச் சார்ந்து பெங்களூரில் மார்ச் மாதம் 8-ம் தேதி நடைபெறும் `Wempower' என்ற நிகழ்ச்சியில் 'உலகின் மிகச்சிறந்த அம்மா' என்று பாராட்டப்பட உள்ளார். மேலும், நிகழ்ச்சியில் நடைபெறும் விவாதங்களிலும் கலந்துகொண்டு பேச உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

ஆதித்யா திவாரி, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி அவ்னிஷ் என்ற 22 மாதக் குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். ஆதித்யாவின் வாழ்க்கையில் அவ்னிஷ் வந்தது, அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. மென்பொறியாளராகப் பணியாற்றி வந்த ஆதித்யா தன்னுடைய வேலையைவிட்டு வந்தார்.

உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து சிறப்புக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றொர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். சிறப்பு குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனைகளைக் கூறி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த விஷயங்களை ஆதித்யா தனியாகச் செய்வதில்லை. தன்னுடைய 6 வயது மகன் அவ்னிஷ் உடன் இணைந்து செய்கிறார் என்பதுதான் சிறப்பு. ``சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களை ஊக்குவிக்கும்போது அவ்னிஷ் முன்னால் அமர்ந்துகொள்வார். அவ்னிஷ் பேசமாட்டார். ஆனால், அவருடைய இருப்பு அவரைப் பார்க்கும் மற்ற பெற்றோர்களுக்கு உந்துதலாக இருக்கும்” என நெகிழ்ந்து கூறுகிறார் ஆதித்யா.

தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து சுமார் 22 மாநிலங்களுக்குப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 400-க்கும் மேற்பட்ட கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஆதித்யா பேசும்போது, ``நாங்கள் உலகம் முழுவதும் உள்ள 10,000 பெற்றோர்களுடன் தொடர்பில் உள்ளோம். மாநாடுகளில் பங்கேற்கவும் சிறப்பு குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும் ஐக்கிய நாடுகள் சபையால் அழைக்கப்பட்டுள்ளோம். அவ்னிஷ், என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவ தனியான சலுகைகள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. அவர்களுக்கு மாற்றுத்திறன் சான்றிதழ்களையும் அரசாங்கம் வழங்குவதில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``நாங்கள் இந்த பிரச்னைகளை மையமாக வைத்து அரசாங்கத்துக்கு மனு ஒன்றை எழுதி அனுப்பினோம். இதன்மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் தனிச் சலுகைகள் உருவாக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது. இப்போது, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சான்றிதழ்களையும் அரசாங்கம் வழங்குகிறது” என்று கூறினார்.

அவ்னிஷ் தன் குடும்பத்தினருடன் வகாட் பகுதியில் வசித்து வருகிறார். பலேவாடி என்ற பகுதியிலுள்ள பள்ளிக்கும் சென்று கொண்டிருக்கிறார். அவ்னிஷ்க்கு இசை, நடனம், புகைப்படங்கள் ஆகியவற்றில் விருப்பம் அதிகம் என்ற ஆதித்யா, ``ஜங்க் ஃபுட், பால் ஆகியவற்றை அவன் சாப்பிடுவதில்லை. அவர் முறையான டயட்டை கடைப்பிடிக்கிறான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்னிஷ்க்கு இதயத்தில் துளைகள் இருந்ததைக் குறிப்பிட்ட ஆதித்யா, ``எந்த மருத்துவ தலையீடும் இல்லாமல் துளைகள் மறைந்துவிட்டன என்றும் குறிப்பிட்டார். எனினும், அவன் சில உடல் பிரச்னைகளை எதிர்கொண்டதால் இரண்டு அறுவைசிகிச்சைகளைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளான். விரைவில், அவனுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது” என்று கலங்கினார். அதற்கு முன்னதாக, தந்தையும் மகனும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், `உலகின் சிறந்த அம்மா’ என்று பாராட்டப்படுவதைக் குறித்து செய்தியாளர்களிடம், ``உலகின் சிறந்த அம்மாவாக கௌரவிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். சிறப்பு குழந்தைகளை வளர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார். இந்தத் தந்தை மகன் பாசத்துக்கு உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தற்போது தங்களது அன்பை தெரிவித்து வருகிறனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.