ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வித்தியாச `மகளிர் தின விழா'!!

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி பெண்களின் முன்னேற்றத்துக்காக உலக மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள குலசேகரபுரம் ஊராட்சியில், குலசேகரபுரம் ஊராட்சி மன்றம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகப் பாரம்பர்ய சாதனங்கள் மூலம் தானியங்களைப் பிரித்தெடுக்கும் போட்டிகள் நடைபெற்றன.


இதில், உரலில் கம்பு தானியம் இட்டு உலக்கையால் குத்தி பிரித்தெடுத்தல், முறத்தால் புடைத்து தானியங்களில் தூசி நீக்குதல், திருகையில் பாசி, உளுந்து பயறுகளை இட்டு இரண்டாக உடைத்தல் ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து பெண்களிடம் பேசினோம், ``சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விளைந்த தானியங்களைப் பக்குவமாகப் பிரித்தெடுக்க உதவியாக உரல், முறம், திருகை, அம்மி போன்ற பாரம்பர்ய அரவைச் சாதனங்கள் அனைத்தும் நம் பயன்பாட்டில் இருந்தன. தமிழில் `உ’ என்ற வார்த்தைக்கு உரல், உலக்கை எனச் சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

அந்தக் காலத்துல புதுப்பெண் புகுந்த வீட்டுக்குக் கொண்டு வரும் சீர்வரிசைகளில் இந்தச் சாதனங்களும் அடங்கும். அரிசியைப் பிரித்தெடுக்க அவிச்ச நெல்லை உரலில் போட்டு உலக்கையால் இடித்து பக்குவமாகப் பிரித்தெடுத்து, சத்துக்கள் நிறைந்த சுவையான சோறு பொங்கி சாப்பிட்டோம். உலக்கையால் மாறி மாறி இடிக்கும்போதும், திருகையில் திருகி தானியங்களைப் பிரித்தெடுக்கும்போதும் செய்த உடற்பயிற்சிதான் அவர்களின் உடல் வலிமைக்குக் காரணமாக இருந்தது.

முன்பெல்லாம் கிராமங்களில் பெண்கள் ஒன்றுகூடி மாவு இடிப்பது வழக்கம். உரலில் ஊறிய அரிசியைக் கொட்டி, உலக்கையால் குத்தி மாவு இடிப்பார்கள். ஒருவர் உலக்கையால் குத்தும்போது மற்றவர் குத்திவிடக் கூடாது. அதைத் தவிர்ப்பதற்காக ``மழை வருது மழை வருது நெல்லை வாருங்கோ, மூணுபடி அரிசி குத்தி முறுக்கு சுடுங்கோ”, ``வீதியிலே கல் உரலாம், வீசி வீசி குத்தறாளாம்”, ``தங்க அரிசி குத்தி தனிப்பாலம் சுத்தி வந்தேன்” போன்ற பாடல்களைப் பாடியபடி உலக்கையால் குத்துவார்கள்.


உரல் இடிப்பது கலையாகவே இருந்தது. உலக்கையால் குத்துவதால் பாடும் பாட்டுகள் உலக்கையின் வேகத்தை ஒழுங்குபடுத்துவதுடன், அவர்களுடைய உடல் அலுப்பையும் மறக்கடிக்கும். `ஆடிப்பாடி வேலை செஞ்சால் அலுப்பிருக்காது’ என்ற தமிழ்ப்பாட்டே இதற்குச் சான்று.

தற்போது மிக்ஸி, கிரைண்டர் போன்ற நவீன சாதனங்களால் இவற்றின் பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளாகிவிட்டன. பெண்களின் வலிமையும் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி விட்டது. உடல் பருமனாகி உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சிக்கு செல்லும் நிலை உண்டானது. தற்போதைய இளைய தலைமுறையினருக்கு இச்சாதனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்” என்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.