ஈரோஸ் அமைப்பு மலையகத்தில் போட்டியிடாது!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈரோஸ் அமைப்பு மலையகத்திலுள்ள மாவட்டங்களில் போட்டியிடாது என அவ்வமைப்பின் மலையக பிராந்திய இணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.


நுவரெலியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஈரோஸ் அமைப்பு கடந்த 40 வருடங்களாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

விரைவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில் மக்கள் பக்கம் நின்று முடிவெடுக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது. இதன்படி பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக களநிலைவரத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ஈரோஸ் அமைப்பின் மத்திய குழு மலையகப் பிராந்தியக் குழுவுக்கு வழங்கியது.

அந்தவகையில் கடந்த ஒரு மாதகாலமாக மலையகத்திலுள்ள மாவட்டங்களின் நிலைவரத்தை ஆராய்ந்தோம். தமிழ் வாக்குகளைச் சிதறடித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக பல குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதை அறிந்தோம்.

எனவே, மலையக மக்களின் வாக்குகளைச் சிதறடித்து, இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யக்கூடாது என்ற முடிவை மலையக பிராந்தியக்குழு எடுத்தது. இதன்படி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.