கொரோனாவால் விளையாட்டு உலகில் முதல் இழப்பு!!

கொரோனா வைரஸால் உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள அச்சம் மிக தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இத்தாலியில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கொரோனாவால் 717 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் வைரஸுக்கான தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்கா இன்று ஆரம்பித்துள்ளது. முதல் ஆளாக 40 வயது பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக 21 வயது இளம் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஸ்பெயின் நாட்டின் கால்பந்தாட்ட கிளப் அணியான அட்லெடிகோ போர்ட்டா ஆல்டாவில் இளம் வயது அணிக்கான பயிற்சியாளராக பணி புரிந்துவந்தவர் பிரான்சிஸ்கோ கார்சியா. சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இவர் நேற்று இரவு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். அதேநேரம் கார்சியா, லுகீமியா நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனுடன் சேர்த்து வைரஸ் தாக்கமும் ஏற்பட உயிரை இழந்துள்ளார். இளம் பயிற்சியாளர் காலமானதால் ஸ்பெயின் விளையாட்டு உலகுக்கு சோகமான நாளாக இது மாறியுள்ளது.

கார்சியா மரணம் குறித்து அட்லெடிகோ போர்ட்டா ஆல்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எங்கள் பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறோம். இப்போது, ​​நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன செய்வது, பிரான்சிஸ். லீக்கில் நாம் எவ்வாறு தொடர்ந்து வெற்றி பெறப் போகிறோம். எப்படி என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால், நாங்கள் உங்களுக்காக வெற்றிபெறுவோம். நாங்கள் உங்களை மறக்க மாட்டோம், நிம்மதியாக ஓய்வெடுங்கள். என்றென்றும் உங்கள் நினைவில்" என்று உருக்கமாக கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு உலகை கலங்கடித்துள்ள இந்த மரணம் குறித்து அந்த கிளப் தலைவர் பெப் புவெனோ கூறுகையில், ``ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் பிரான்சிஸ் உடல்நிலை சீராகிவிட்டதாக மருத்துவமனை தரப்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரம் கழித்து கொரோனா வைரஸ் மற்றும் (லுகேமியா) காரணமாக உயிரிழந்துவிட்டார் என்றார்கள்… நான் அதை நம்பவில்லை. இது எனக்கு சாத்தியமற்றதாகத் தெரிகிறது" என்று கூறியுள்ளார். ஸ்பெயினில் கொரோனா காரணமாக கிட்டத்தட்ட 300 பேர் இறந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. மேலும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.