கொரோனா பீதியால் பிலிப்பைன்ஸில் தவிக்கும் மருத்துவ மாணவர்கள்!!

கொரோனாவால் இந்தியாவில் 125 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து மக்கள் வர இந்தியா தடை விதித்துள்ளது. இது, கொரோனா பரவுவதைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும், வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மருத்துவம் பயில பிலிப்பைன்ஸ் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்ற மாணவர்கள் அங்கேயும் தங்க முடியாமல் இந்தியாவுக்கும் வர முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.


இதைப் பற்றி பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயிலும் பாரதி என்ற மாணவி கூறியதாவது, ``நாங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வருகிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இங்கே பயிலும் மாணவர்கள் பலர் இந்தியா சென்றுவிட்டனர். கடைசி ஆண்டு படிப்பவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெற்றது. அதை முடித்துவிட்டு இந்தியாவுக்குச் சென்றுவிடலாம் என்று நாங்கள் ஆசையாகக் காத்திருந்தோம். தேர்வு முடித்துவிட்டு இந்தியா புறப்படத் தேவையான விசா முதலியன தயார் செய்யத் தொடங்கினோம். அதற்குள்ளாக, ``பிலிப்பைன்ஸில் தங்கிப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், மூன்று நாள்களுக்குள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட வேண்டும்'' எனப் பிலிப்பைன்ஸ் நாடு ஓர் அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கையால், ஒரே நாளில் கஷ்டப்பட்டு இந்தியா வரத் தேவையானவற்றைத் தயார் செய்து மணிலா விமான நிலையத்துக்கு வந்தால், அங்கே எங்கள் பயணச் சீட்டை ரத்து செய்துவிட்டார்கள் என்றும் இந்தியாவில் வெளிநாட்டவர்கள் வரத் தடை செய்துவிட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை அறியாத 15 பேர் விமானத்தில் சென்றுவிட்டனர் அவர்கள் நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை.

அது மட்டுமல்லாமல் இங்கு எரிமலை வெடிக்கப்போகிறது என்றும் கூறுகிறார்கள். சீனாவில் படிக்கும் மாணவர்களை விமானம் அனுப்பி அழைக்கும்போது நாங்களாக வர முயற்சி செய்யும்போது அதையும் இந்தியா தடை செய்கிறது. இங்கு சாப்பாடுகூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம் . இங்கும் கொரோனா பரவத் தொடங்கிவிட்டது. தாய் நாட்டுக்கும் வர முடியாமல் இங்கேயும் வாழ முடியாமல் கஷ்டப்படுகிறோம் எங்களை மீட்க தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்'' எனக் கண்ணீர் மல்கத் தெரிவிக்கிறார் மாணவி பாரதி.

இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.