வடக்கு ஆளுநரால் பல தீர்மானங்கள் அறிவிப்பு!

வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றிய விசேட கலந்துரைாயடல் இன்று (வியாழக்கிழமை) யாழில் நடைபெற்றது.


ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள் தொடர்பான இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன,

பலசரக்குப் பொருட்கள்

உள்ளூர் பலசரக்குக் கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து திறந்து நடத்துவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாது நடந்துசென்று தமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நோக்கத்திற்காக வாகன பயன்பாடு அனுமதிக்கப்படமாட்டாது.

பலசரக்கு கடைகள் அல்லது அங்காடி விற்பனை நிலையங்கள் அவசியமான ஐந்து அல்லது ஆறு பொருட்களை 500 ரூபாய், 1000 ரூபாய் பெறுமதியான பொதிகளாக்கி வாகனங்களில் கொண்டுசென்று விற்பனை செய்யமுடியும்.

மரக்கறி வகைகள் 

தற்போது உள்ள சூழ்நிலையில் சந்தைகளை இயக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை கருத்திற்கொண்டு பின்வரும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மரக்கறி வியாபாரிகள் தாங்களாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து உள்ளூரில் விற்பனை செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளார், உள்ளூராட்சி சபைகள், கமநல சேவைகள் திணைக்களம், விவசாயத் திணைக்களம் என்பன இணைந்து பொருத்தமான நடைமுறைகளை ஏற்படுத்தல் வேண்டும்.

கடல் உணவுகள்

ஊரடங்கு நேரத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கபட்டுள்ளது. சந்தைகளில் மீன் விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மாற்று ஒழுங்காக அவற்றை வியாபாரிகள் வீதிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.

வெதுப்பகம்

ஊரடங்கு நேரத்தில் வெதுப்பகங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெதுப்பகங்களின் உற்பத்திகளை நடைமுறையில் உள்ள விநியோக முறைப்படி வாகனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி ஆலை

அரிசியின் சீரான விநியோகத்தை மேற்கொள்வதற்காக அரிசி ஆலைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ். மாவட்டதிற்கு அரிசி கொண்டு வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திற்கான அரிசி இருப்பை உறுதிபடுத்தும் பொருட்டு ஏனைய மாகாணங்களுக்கு அரிசி கொண்டு செல்வது தொடர்பாக உரிய மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

ஐஸ் தொழிற்சாலை

மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மருந்தகம்

மருந்தகங்கள் ஊரடங்கு நேரத்தில் திறந்திருக்கும். வைத்திய மருத்துவக் குறிப்பேடு மற்றும் கிளினிக் கொப்பிகளுடனும் சென்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். கிளினிக் கொப்பியுடன் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் செல்ல நோயாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வொழுங்குகளை யாழ். மாவட்டத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்துவதுடன் ஏனைய மாவட்ட அரசாங்க அதிபர்கள் தங்கள் மாவட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்க சுற்றுநிரூபங்கள் மற்றும் தற்போதுள்ள விசேட நடைமுறைகளுக்கு அமைவாக இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.