கொரோனாவை விரட்ட யோகா!!

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் கேரள காவல்துறை தொடர்ந்து அளப்பறிய செயல்களைச் செய்து வருகிறது.


குறிப்பாக, சமூக வலைத்தளத்தில் அவர்களுடைய நடவடிக்கைகள் உலக அளவில் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகின்றன.

தற்போது நாடு முழுவதும் 21-நாள் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டியுள்ளது.

இந்த ஊரடங்கை வலியுறுத்தும் வகையில், மலையாளத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஜெயராம், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களை கேரள காவல்துறை களத்தில் இறக்கியுள்ளது.

மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்பதை அவர்கள் வேண்டிக் கேட்டுக்கொள்ளும் வீடியோக்கள் தற்போது வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மேலும், “Yoga against Corona” என்ற புதிய டேக்குடனும் களமிறங்கியுள்ளது கேரள காவல்துறை. இது தொடர்பான 10-நிமிட வீடியோ ஒன்றையும் அது வெளியிட்டு அசத்தியுள்ளது.

யூடியூப் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ, கேரள காவல்துறையின் தலைமை அலுவலக வளாகத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் பலவிதமான ஆசனங்கள் செய்து காட்டப்படுகின்றன. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் மக்கள் தினமும் இந்த ஆசனங்களைச் செய்வதன் மூலம் தங்கள் சுவாசத் திறனை அதிகரித்து, கொரோனாவை வெல்லலாம் என்று இவ்வீடியோவில் அறிவுறுத்தப்படுகிறது.

தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள கேரள காவல்துறை தலைவர் ஸ்ரீ லோக்நாத் பெஹேரா இந்த 'யோகா வீடியோ' ஐடியாவைக் கொடுக்க, அதை அம்மாநில சமூக ஊடகப் பிரிவின் தலைவரும் ஏ.டி.ஜி.பி.யுமான ஸ்ரீ மனோஜ் ஆப்ரஹாம் செயலுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இந்த வீடியோவில் ஆசனங்களைச் செய்பவர்கள் அனைவருமே கேரள காவல்துறை அதிகாரிகள்தான். வழக்கம்போல் இந்த வீடியோவும் உலகம் முழுவதும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது; மக்களிடையே கேரள காவல்துறையின் மதிப்பையும் கூட்டியுள்ளது.

மனிதனுக்கும் வைரஸுக்கும் இடையிலான இந்த மாபெரும் 'போரில்', கேரள காவல்துறை வழக்கம்போல் தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.