மலேசியாவில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழர்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பாதிப்புகள் தொடர்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைப் போல் மலேசியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்நிலையில், அங்கு பிழைப்புத் தேடியும், படிப்பிற்காகவும் சென்ற தமிழர்கள் பலர் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். மேலும், மலேசியா- இந்திய இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் சூழலை விளக்கி உதவிகள் கேட்டு வருகிறார்கள். சமீபத்தில், தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு படிக்கச் சென்ற மாணவர்கள் அனுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

நிலமை இப்படியிருக்க, இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை பூர்வீகமாகக் கொண்டு, மலேசியாவில் பல நிறுவனங்கள் நடத்திவரும் தொழிலதிபரான டத்தோ. பிரகதீஸ்குமார் என்பவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தந்திருப்பதுடன், கடந்த சில தினங்களாக அவரின் சொந்த செலவில் உணவு வழங்கி வருகிறார்.

மேலும், அவர் பாதிக்கப்பட்ட அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் இறங்கியநிலையில், சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தவிக்கும் தமிழர்களை சொந்த செலவில் தமிழகம் அனுப்ப முன் வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக மலிண்டோ விமான நிறுவனத்தின் தனி விமானம் மூலம், 179 பேரை மட்டும் அனுப்பி வைக்க விமானம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். இந்த தனி விமானம் வரும் திங்கள்கிழமை சென்னைக்கு வர உள்ளது.


டத்தோ. பிரகதீஸ்குமாரிடோம் பேசினோம். ``கொரோனோ வைரஸ் தாக்கம் உலக அளவில் பெரும் பேரழிவை உண்டாக்கி வருகிறது. இந்தியாவைவிட மலேசியாவில் சூழல் மோசமாக உள்ளது. இங்கு யாரும் வெளியில் நடமாடக் கூட முடியாத நிலை. அவ்வளவு கட்டுப்பாடுகள். இந்நிலையில், இங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களின் சூழலைச் சொல்ல வார்த்தைகளில் இல்லை.

இங்குப் பல நிறுவனங்கள் நடத்தி வருவதால், நல்ல நிலைமையில் உள்ளோம். அந்த வகையில் எங்களால் ஆன உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்தச் சூழலில், தற்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்தோம். அந்தவகையில், மலேசியாவில் பாதிக்கப்பட்ட சுமார் 600க்கும் மேற்பட்டவர்களை எங்களுக்குச் சொந்தமான இடத்தில் தங்க வைத்து உணவு வழங்கி வருகிறோம். இந்தியாவிலும் சூழல் சரியில்லை. நிலைமை மிகவும் சிரமமாக உள்ளது.

ஆனால், இவர்கள் எப்படியாவது தமிழகம் போக வேண்டும் குடும்பத்துடன் சேர்ந்துவிட வேண்டும் என தவிக்கிறார்கள். அவர்களின் வலி புரிகிறது. அதனால், இவர்களைத் கொஞ்சம் கொஞ்சமாக தமிழம் அனுப்பி வைக்க முடிவெடுத்தேன்.

தனி விமானத்தில் 179 பேர் மட்டும்தான் அமர முடிவும் என்பதால், இங்குள்ளவர்களில் வயதானவர்கள், குடும்பச் சூழல் உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு அவசியமாக ஊருக்குச் செல்ல வேண்டியவர்களை முதற்கட்டமாக அனுப்பி வைக்க உள்ளோம்.

திட்டமிட்டபடி தனி விமானம் மலேசியாவில் இருந்து திங்கள்கிழமை புறப்படும். மேலும், சென்னை வரும் அந்த விமானம் திரும்பி வரும்போது காலியாக வரும் என்பதால், இதேநிலையில், தமிழகத்தில் பரிதவித்து மலேசியா திரும்பி வர இயலாமல் இருப்பவர்களை மலேசியா அழைத்துவரவும் ஏற்பாடு செய்துள்ளோம். நம்மால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்” என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.