துப்பறிவாளனுக்கு மிஷ்கினின் நிபந்தனைகள்!

மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. எனவே, அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவிட முதல் பாகத்தை தயாரித்து, நடித்திருந்த விஷால் முடிவெடுத்தார். ஆனால்,
மிஷ்கினின் சைக்கோ திரைப்படம் முடிந்ததும் தொடங்கப்பட்ட துப்பறிவாளன் 2 ஷூட்டிங் அவ்வளவு விரும்பத்தக்கதாக இல்லை. மிஷ்கின் மற்றும் விஷாலுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நின்றுபோன துப்பறிவாளன் 2 ஷூட்டிங்கை தொடங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார் மிஷ்கின். துப்பறிவாளன் திரைப்படம் முதலில் தமிழில் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்ட வெர்ஷன்கள் ஹிட் ஆனதால் இதனை இந்திக்கும் கொண்டு சென்றார் விஷால். கோல்டுமைன் மூவீஸ் என்ற இந்தி திரைப்பட நிறுவனத்துக்கு இந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமை விற்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனமோ இத்திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் அவர்களது யூடியூப் சேனலில் டேஷிங் டிடக்டிவ் என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர். யாரும் எதிர்பாராத விதமாக யூடியூபில் ஒரு லட்சத்துக்கும் மேலான இந்தி திரைப்பட ரசிகர்களால் இத்திரைப்படம் பார்க்கப்பட்டது. படம் பார்த்த பல ரசிகர்களாலும் கேட்கப்பட்ட ஒரே கேள்வி ‘இவ்வளவு நல்ல படத்தை ஏன் தியேட்டரில் ரிலீஸ் செய்யவில்லை?’ என்பது தான். டேஷிங் டிடக்டிவ் திரைப்படத்துக்கு இந்தித் திரையுலகில் கிடைத்த வரவேற்பினால் இரண்டாம் பாகத்தின் இந்தி உரிமையையும் அவர்களே வாங்கிக்கொள்வதாகக் கூறியதால், மிஷ்கின் இயக்கும் இந்தப் படத்தை இந்தியிலும் சேர்த்தே வெளியிடலாம் என முடிவெடுத்தார் விஷால். எனவே, தமிழ்-தெலுங்கு-இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் துப்பறிவாளன் 2 திரைப்படம் ரிலீஸாகப்போவதால் தனது சம்பளத்தை மிஷ்கின் 5 கோடி ரூபாய் அளவுக்கு தற்போது உயர்த்திக் கேட்டிருக்கிறார். மேலும், இந்தி உரிமை உட்பட துப்பறிவாளன் படங்களின் அத்தனை உரிமைகளையும் மிஷ்கினின் பெயருக்கு மாற்றித் தரவேண்டும் என்றும் கேட்டிருப்பதால் நெருக்கடியான சூழலில் சிக்கியிருக்கிறார் விஷால் என்கின்றனர் படக்குழுவினர். இந்தப் படத்தை எடுத்து முடிக்கும் வரையிலும், மிஷ்கினின் அலுவலக செலவையும் புரொடக்‌ஷன் நிறுவனமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் மிஷ்கினின் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர். மிஷ்கின் கேட்பது முழுவதுமே நியாயம் என்றாலும், படம் உருவாக்கப்பட்ட பிறகு இவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தை தயாரிப்பாளரும், இயக்குநரும் பாதி பாதியாக பிரித்துக்கொள்ள வேண்டுமே தவிர ஒரு தரப்பு மட்டுமாக அனைத்து உரிமைகளையும் எடுத்துக்கொள்ளமுடியாது என்கின்றனர். இந்தப் பிரச்சினைகளெல்லாம் முடிந்தால் தான் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அப்படி விரைவில் படப்பிடிப்பு தொடங்கவில்லையென்றால் வாங்கிய சம்பளம் சரியாகப் போய்விடும் என்றும் அடுத்த படத்தை இயக்க நான் கிளம்பிவிடுவேன் என்றும் மிஷ்கின் தெரிவித்திருப்பதாக படக்குழுவினர் வருத்தப்படுகின்றனர். -சிவா
Blogger இயக்குவது.