பிரதமர் மோடி, அமித்ஷாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல்
சென்னை பா.ஜனதா அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் கொலை செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த மர்ம கடிதத்தில், தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றும், மீறினால் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கடத்தி செல்வோம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.
அந்த கடிதத்தில், குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் கொலை செய்வோம் என்றும், முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உசேன் என்பவர் பெயரில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதம் மாம்பலம் போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மாம்பலம் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி பா.ஜனதா அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.