நீறாக்கப்பட்டது உலகத்தின் நிம்மதி

வைரஸின் திணறலில்
உலகத் தாய்
கருச்சிதைவுற்றிருக்கிறாள்..

சொல்லொண்ணாத் துன்பம்
சோகத்தின் தொடர் நாட்கள்
அங்கும் இங்கும் எங்கும்
மயான பூமி...

சிதிலங்களுக்கு மத்தியில்
வாழ்வைத் தேடும் மனிதன்....
மனித உயிர் ஒவ்வொன்றும்
செல்லாய்க் காசாய் சிதறும்
கெடுந்துயர்...

வீட்டுக்குள்ளே சிறை..
வீட்டுக்குள்ளேயே – மனித
சடலம் மிதக்கும் அவலம்...

நோயுற்ற நிலையில் கூட
அருகமர்ந்து கவனிக்க முடியாது
மனிதனை மரணமெனும் மன நோய்
மடிய வைத்துவிடும் பேரவலம்...

ஈமைக் கிரிகைக் கூட
இடமின்றித்தவிக்கும்
பூமித்தாயின் மடி....

மரணத்தின் நிழல்
போர்த்தியிருந்த பூமியெங்கும்
ஆழ் அமைதி...
அழிவின் விளிம்பில்
ஓங்கி ஒலிக்கும் மரண ஓலம்...

கடவுளுக்கும்
மனிதனுக்குமான உறவு
காலாவதியாகிவிட்ட நிலையில்
நீறாக்கப்பட்டது
உலகத்தின் நிம்மதி...

 சங்கரி சிவகணேசன்
29.03.2020


Blogger இயக்குவது.